பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பாரதப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆந்திர முதலமைச்சர் தன்னுடைய அதிரடி திட்டங்களால் ஒட்டுமொத்த இந்திய நாட்டின்  கவனத்தையும் ஈர்த்து வருகிறார். என்னதான் அதிரடி முதலமைச்சர் என அவர் பெயரெடுத்திருந்தாலும் அவர் மத்திய அரசுடன் சுமுகமான போக்கையே கடைபிடித்து வருகிறார். அவர் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையபோகிறார் என கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இன்று திடீரென டெல்லியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் சுமார் 40 நிமிடத்திற்கு மேலாக அவரது சந்திப்பு இருந்துள்ளது. 

கடப்பா ஸ்டீல் ஆலை, போலாவரம் பாசன திட்டத்திற்கான நிலுவையில் உள்ள நிதியை விடுவிப்பது போன்ற பல்வேறு திட்டங்களுக்காகவும், இன்னும் அதில் உள்ள நிலுவைத் தொகை மற்றும்  ஒப்புதல்கள் குறித்தும் பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி விவாதித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்னூல் மாவட்டத்தில் உயர் நீதிமன்றம் அமைப்பதற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி, போலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு 1,250 கோடி ரூபாய் நிதியையும் வழங்கிடுமாறு  மோடியிடம் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மோடியுடனான சந்திப்புக்கு பிறகு வீடியோ கான்பரன்சிங் மூலமாக கிருஷ்ணா-கோதாவரி நதி நீர் பகிர்வு பிரச்சினை தொடர்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோருடன் உச்ச கவுன்சில் கூட்டத்தில் ரெட்டி கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இத்தகவல்கள் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்படும் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அரசியல் களத்தில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோன்மணி அகாலிதளம்  பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ள இந்நிலையில், மாநிலங்களவையில் தங்களுக்கு பலம் குறைந்துள்ளதை உணர்ந்துள்ள பாஜக ராஜ்யசபாவில் 6 எம்பிக்களை கொண்டுள்ள, ஜெகன்மோகன் ரெட்டியை தங்களது கூட்டணிக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் உன்னிப்பாக இருந்துவருவதாகவே இந்த சந்திப்பு உணர்த்துகிறது. அதேநேரத்தில் விவசாய மசோதா அவசியமான ஒன்றுதான் என ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், அவர் மோடியை சந்தித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் ஒய் எஸ் ஆர்  காங்கிரஸ் இணையும் பட்சத்தில், அக்காட்சியை சேர்ந்த இருவருக்கு இரண்டு மத்திய அமைச்சர் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதாலேயே ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடியை இன்று சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல ஏற்கனவே ஜெகன்மோகன் ரெட்டியின் மீது உள்ள பழைய வழக்குகளை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி பாஜக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.