andhra mla indirectly saved ops include eleven mlas

சபாநாயகரின் அதிகார வரம்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, சபாநாயகரின் அதிகார வரம்பில் தலையிட முடியாது எனக்கூறி, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். 

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அதை சுட்டிக்காட்டி, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க கோரி சபாநாயகரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அதன்மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததால், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்கு உத்தரவிட கோரி திமுக கொறடா சக்கரபாணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதை விசாரித்து வந்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு, இன்று தீர்ப்பளித்தது. அப்போது, சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என கேட்டு தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி சபாநாயகரின் அதிகார வரம்பில் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. 

இந்த வழக்கில், 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்படாமல் தப்பிக்க, ஆந்திர எம்.எல்.ஏ உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குதான் காரணம். ஆந்திராவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர், 5 எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து அந்த எம்.எல்.ஏக்கள் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து வழக்கை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அந்த 5 பேரில் ஒருவரான சம்பத்குமார் என்ற தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியுமா? சபாநாயகரின் அதிகார வரம்பு, நீதிமன்றத்துக்கு உட்பட்டதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கம் கேட்டுள்ளார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டித்தான், சென்னை உயர்நீதிமன்றம், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.