Asianet News TamilAsianet News Tamil

சிறப்பு அந்தஸ்திற்காக அன்னத்தில் கைவைக்காத ஆந்திர முதல்வர்!! பிறந்தநாளில் நாயுடு உண்ணாவிரதம்

andhra cm chandrababu naidu fasting
andhra cm chandrababu naidu fasting
Author
First Published Apr 20, 2018, 11:42 AM IST


ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அப்போது, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. 

அதன்பிறகு கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. பாஜக தலைமையிலான கூட்டணியும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. ஆனால், அதன்பிறகு நான்காண்டுகள் ஆகியும் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை.

இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் இதுதொடர்பான அறிவிப்பை ஆந்திர அரசு எதிர்பார்த்தது. ஆனால், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்த்து அக்கட்சியையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஆந்திராவிற்கான உரிமையை பெற்றே தீருவேன் என திட்டவட்டமாக கூறியுள்ள சந்திரபாபு நாயுடு, அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி சார்பில், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் நிலவிய தொடர் அமளியால் அதன்மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.

இந்நிலையில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, சந்திரபாபு நாயுடு அமராவதியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது பிறந்தநாளான இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள் என அனைவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios