பாமக. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று 80-வது பிறந்தநாள். முத்து விழா காணும் அவருக்கு அவரது மகனும் பாமகவின் இளைஞரணி செயலாளருமான அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தார். 

மருத்துவராக, விவசாயியாக, போராளியாக, தலைவராக, ஆசிரியராக, வழிக்காட்டியாக, மனஉறுதி மிக்க வீரராக, அரசியல் சாணக்கியராக, பிடிவாதக்காரராக, எல்லாவற்றுக்கும் மேல் எனக்கு நல்ல அன்பான கண்டிப்புமிக்க தந்தையாக இன்று முத்துவிழா காணும் மருத்துவர் ஐயாவை பெருமையாக பார்க்கிறேன்.

ஆறு வயதில் பள்ளி விடுதியில் சேர்த்த கண்டிப்பு மிக்க தந்தையை பார்த்திருக்கிறேன், ஆண்டுதோறும் சுற்றுலா அழைத்து செல்லும் அன்பான அப்பாவை பார்த்திருக்கிறேன், பெரும் போராளியாக சிறையில் பார்த்திருக்கிறேன், ஒரு டாக்டராக மருத்துவமனையில் பார்த்திருக்கிறேன்.

மகனுக்கு தந்தையின் பெருமைகளை பிறரிடம் சொல்ல ஒரு திரில்லிங் அனுபவமிருக்கும் எனக்கு அந்த அனுபமில்லாக் காரணம் என் தந்தை சமூகப்போராளியும், ஓய்வறியா உழைப்பாளியுமான மருத்துவர் ஐயா பற்றி எனக்குத் தெரிந்தவை எல்லாம் உங்களுக்கும் தெரிந்த காரணம்தான் என தனது தந்தையை பற்றிய பெருமைகளை பதிவிட்டுள்ளார்.

அதேபோல திமுக தலைவர் ஸ்டாலினும் ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்;  முத்து விழாவினை கொண்டாடும் அய்யா ராமதாஸ் அவர்கள், சிறப்பான உடல்நலனுடனும், நிறைவான மனவளத்துடனும், நீண்ட காலம் வாழ, வணக்கத்துடன் வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.