தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகளை திறந்தால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகள் திறக்கப்பட இருப்பதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இன்று முதல் கோரப்படவுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். முதற்கட்டமாக வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் 21 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று தெரிகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்குடனான தமிழக அரசின் இம்முடிவு கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பது ஆற்று மணல் கொள்ளைதான். அதைக் கருத்தில் கொண்டுதான் தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் அடுத்த 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று கடந்த 29.11.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்தது. அத்தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைதான் விதித்திருக்கிறதே தவிர, தமிழக அரசின் மணல் கொள்ளையை அங்கீகரிக்கவில்லை. இதுதவிர தமிழகத்திலுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். அந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. இதற்கெல்லாம் மேலாக, மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற தீர்ப்புக்குத் தான் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதே தவிர, புதிய குவாரிகளைத் திறக்க அனுமதி அளிக்கவில்லை.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதையோ, மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலமாகத் தான் தடை விதித்திருக்கிறது என்பதையோ மதிக்காமல் அடுக்கடுக்காக புதிய மணல் குவாரிகளை தமிழக அரசு திறந்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். புதிதாக திறக்கப்படவுள்ள 21 குவாரிகளில் 9 குவாரிகள் காவிரி பாசன மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளன. இவை தவிர திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய வட மாவட்டங்களில் தலா 3 குவாரிகள் வீதம் 12 மணல் குவாரிகள் திறக்கப்படவுள்ளன. காவிரி பாசன மாவட்டங்கள் தான் மணல் குவாரிகளால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக குறைந்திருப்பதுடன், கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடல் நீர் ஊருக்குள் புகுந்திருக்கிறது. இதனால் காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் புதிதாக தொடங்கப்படும் மணல் குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகளை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. மூன்று அடி ஆழத்திற்கு மட்டும்தான் மணல் அள்ள வேண்டும், இயந்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று விதிகள் இருந்தாலும் கூட அவை எதையும் தமிழக அரசும், மணல் கொள்ளையர்களும் பின்பற்றுவதில்லை. மாறாக 40 அடி முதல் 60 அடி ஆழம் வரை மணல் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்புகள் புதிய மணல் குவாரிகளிலும் தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் காவிரி பாசன மாவட்டங்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் சிறிதும் தண்ணீர் இல்லாத பாலைவனமாக மாறிவிடும். இதைத் தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், அக்கடமையை மறந்து பினாமி அரசே மணல் கொள்ளையில் பங்குதாரராக மாறிவிட்ட நிலையில், மக்களைத் திரட்டிப் போராடுவதன் மூலம் அரசின் கடமையை நிறைவேற்றும் வலிமை பா.ம.க.வுக்கு உண்டு.

மதுரையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திலுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் அரசே நடத்தும் என்றும், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்படும் என்றும் அறிவித்தார். அதன்பின்னர் ஓராண்டு ஆகப்போகும் நிலையில் மணல் குவாரிகளை படிப்படியாக மூடுவதற்கு பதிலாக, புதிதாக மணல் குவாரிகளை பினாமி அரசு திறந்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த சில மாதங்களாக அனைத்து மணல் குவாரிகளும் தமிழக அரசால் நேரடியாக நடத்தப்பட்டு வந்த நிலை மாறி, இப்போது புதிய மணல் குவாரிகளையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு அரசு தயாராகி வருகிறது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு காவிரி பாசன மாவட்டங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

மணல் குவாரியிலிருந்து கிடங்குகளுக்கு மணலை அள்ளிக்கொண்டு வருவதற்கு மட்டும்தான் இந்த ஒப்பந்தம் வழங்கப்படுவதாகவும், இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்றும் முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் நேற்று கூறியிருக்கிறார். இதைவிட கடுமையான விதிமுறைகள் மற்றும் குறைவான பொறுப்புகளுடன் தான் கடந்த காலங்களில் ஆறுமுகசாமி, கே.சி.பழனிச்சாமி, சேகர் ரெட்டி, பள்ளத்தூர் படிக்காசு உள்ளிட்டோருக்கு மணல் அள்ள ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. ஆனால், அதைப் பயன்படுத்தி பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மணல் கொள்ளை அடிக்கப்பட்டதும், அதில் தங்களின் பங்கை வாங்கிக் கொண்டு ஆட்சியாளர்கள் அமைதியாக இருந்ததும் நாடறிந்த வரலாறு ஆகும். அந்த வரலாற்றை மீண்டும் எழுதுவதற்காகத்தான் மணல் குவாரிகளை அரசு தனியாரிடம் ஒப்படைக்கிறது.

தமிழ்நாட்டில் மணல் பற்றாக்குறை நிலவுவதும், அதனால் கட்டுமானத் தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் உண்மைதான். தரமான செயற்கை மணலை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தல் ஆகியவற்றின் மூலம் இதை சமாளிக்க முடியும். ஆனால், இதையெல்லாம் செய்யாமல், இறக்குமதி செய்யப்பட்ட மணலை குறைந்த விலையில் விற்பனை செய்ய விடாமலும், செயற்கை மணல் உற்பத்தியைக் குறைத்தும் செயற்கையான மணல் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும்; அதன் மூலம் மணல் குவாரிகளை திறந்து கோடிகளை குவிக்க வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் திட்டம் ஆகும். மக்கள் நலனையும், சுற்றுச்சூழலையும் விரும்புபவர்களால் இதை அனுமதிக்க முடியாது.

எனவே, தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடுவதுடன், ஏற்கனவே உள்ள மணல் குவாரிகளையும் மே மாதத்திற்குள் மூட வேண்டும். இல்லாவிட்டால் புதிய மணல் குவாரிகளின் முன்பாக மக்களைத் திரட்டி நானே முன் நின்று தொடர் போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.