anbumani teased dmk
ஆர்.கே.நகரில் திமுகவின் நிலை மிகவும் பரிதாபமாகியிருக்கிறது. அவர்கள் திருமங்கலத்தில் எதை விதைத்தார்களோ, அதை ஆர்.கே. நகரில் அறுவடை செய்திருக்கின்றனர் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு எந்த வகையிலும் அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை. இந்த முடிவுகள் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், தேர்தல் நடத்தப்பட்ட விதமும், வாக்குகள் ஏல முறையில் விலைக்கு வாங்கப்பட்ட விதமும்தான் தமிழ்நாட்டில் இனி ஜனநாயகம் எப்படியெல்லாம் படுகொலை செய்யப்படுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்புமே தமிழ்நாடு முழுவதுமிருந்து தங்கள் ஆதரவாளர்களை அழைத்து வந்து தேர்தல் பணி செய்தனர். மூன்று தரப்புமே வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தன. கொடுக்கப்பட்ட பணத்தின் மதிப்பும், நேரமும் வேண்டுமானால் மாறுபடலாமே தவிர, ஓட்டுக்கு பணம் தரவில்லை என்று இந்த மூன்று கட்சிகளில் ஒருவர் கூட சொல்ல முடியாது. அவ்வாறு பணம் கொடுத்திருந்தும் தினகரன் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் சொல்லப்பட்டிருக்கும் செய்தி என்னவெனில், ''தேர்தலில் வெற்றி பெற பணம் கொடுத்தால் மட்டும் போதாது... மற்ற வேட்பாளர்கள் கொடுப்பதை விட அதிகமாகக் கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்'' என்பதுதான். அதைத் தான் தினகரன் தரப்பினர் செய்தார்கள்... அதனால்தான் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதுதான் யதார்த்தம். இதைத்தாண்டி வேறில்லை.
ஆனால், தேர்தல் வெற்றிக்கான இத்தகைய அணுகுமுறை ஜனநாயகத்துக்கு எத்தகைய எச்சரிக்கை மற்றும் அச்சுறுத்தலை விடுத்திருக்கிறது என்பதைத்தான் அனைவரும் சிந்திக்க வேண்டும். ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி ஆகும். தேர்தலில் மக்களின் மனதில் எந்தவித தாக்கமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே பரப்புரை நிறுத்தப்படுகிறது. இதையெல்லாம் ஒருபுறம் செய்துவிட்டு, மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க அனுமதிப்பது எந்த வகையான நியாயம்?
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தினகரன் தமிழகத்திற்காகவோ, தமிழக மக்களின் நலனுக்காகவோ போராடியவர் அல்ல. தமிழகத்திற்கு அவர் எந்த நன்மையும் செய்து விடவில்லை. அப்படிப்பட்ட ஒருவர் பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற முடியுமானால் இது எந்த வகையான ஜனநாயகம் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.
இந்தத் தேர்தலில் திமுகவின் நிலை மிகவும் பரிதாபமாகியிருக்கிறது. அவர்கள் திருமங்கலத்தில் எதை விதைத்தார்களோ, அதை ஆர்.கே. நகரில் அறுவடை செய்திருக்கின்றனர். திமுகவால் போலிகள் என்று அடையாளம் காட்டப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்ட பிறகும் அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க, வைப்புத் தொகையைக் கூட வாங்குவதற்கு படாதபாடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட போதிலும் கடந்த தேர்தலில் திமுக வாங்கிய வாக்குகளில் பாதியை தினகரன் கைப்பற்றியிருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் வாக்குகளுக்கு கொடுக்கப்பட்ட பணம்தான் என்பதை திமுக தலைமை இப்போதாவது உணர்ந்திருக்கும். அதிமுக அரசியல் கட்சியாக இருப்பதற்கே தகுதியற்றது என்பதால் அதன் செயல்பாடுகளை ஆராயத் தேவையில்லை.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், ஓட்டுக்கு கடந்த முறை வழங்கப்பட்டதை விட அதிக பணம் இம்முறை வழங்கப்பட்ட போதிலும், அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தேர்தலில் பணம் தான் வெற்றிபெறப் போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்தது. அப்போதே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்; ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது. ஆனால், இரண்டாவது முறையாக தேர்தலை ஒத்திவைத்தால் அது தங்களுக்கு அவமானம் என்று கருதி அனைத்து முறைகேடுகளையும் ஆணையம் அனுமதித்தது.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் பணம் தான் வெற்றியைத் தீர்மானித்தது. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரம் இனியும் நீடித்தால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது. எனவே, இனிவரும் காலங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும். எத்தனை முறை பணம் கொடுக்கப்பட்டாலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். 10 விழுக்காட்டுக்கும் கூடுதலான தொகுதிகளில் ஒரு கட்சி வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அக்கட்சியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதற்கெல்லாம் மேலாக தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில்லை என உறுதியேற்றுக் கொண்டு அதன்படி செயல்படுவதற்கு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
