அதிமுக-பாமக கூட்டணி பற்றி பலத்த விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் பாமக நிர்வாகிகளுக்கு சில விஷயங்களை எடுத்துச் சொல்லும் வகையில் நேற்று  புதுச்சேரியில் பாமகவின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டினார். 

இக்கூட்டத்தில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, அதிமுகவோடு கூட்டணி வைத்தது ஏன் என்று விளக்கினார்.

8 ஆண்டுகள் பாமக தமிழ்நாட்டில் தனியாக தேர்தலை சந்தித்தோம். மக்கள் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 25 லட்சம் வாக்குகளை நமக்கு அளித்தார்கள். தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வந்தோம். ஆனால், எந்த ஒரு ஊடகமாவது இதைப் பாராட்டியதா? பாராட்ட வேண்டாம்… எடுத்துச் சொல்லவாவது செய்ததா?

தனிச்சு நின்னா ஆதரிக்க மாட்டீங்க. கூட்டணி சேர்ந்தா திட்டுறீங்க. ஊடகங்கள் செய்யுறது என்ன நியாயம்? எங்க மேல் என்ன ஆத்திரம்? மற்ற கட்சிகள் எவ்வளவோ இருக்கு. அதையெல்லாம் ஏன் விமர்சனம் பண்ண மாட்டேங்குறீங்க? அதனாலதான் சொல்றேன்… கூட்டணி விஷயத்துல ஐயாவை விமர்சனம் செய்யுறதுக்கு யாருக்கும் தகுதியில்ல.

நம் இலக்கை அடைய வேண்டுமென்றால் சூழலுக்கேற்ற வியூகங்களை வகுக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் இந்த முடிவு” என்றார்.

“தமிழ்நாட்டின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து ஐயாவப் பாத்து, ஆசிர்வாதம் பண்ணுங்கனு சொல்றாங்க. இந்த மரியாதை நமக்கு ரொம்ப முக்கியம். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டு எடுக்க தான்  கூட்டணி வச்சிருக்கோம்.

கூட்டணி பற்றி விக்ரம் வேதா படத்தில் வரும் விஜய் சேதுபதி  ஒரு கதை சொல்லட்டா என சொல்வதைப்போல  ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க... புகையிலையை எதிர்த்து நாம் போராட்டம் பண்ணினோம். அது போல எத்தனையோ போராட்டம் செஞ்சிருக்கோம்.

எங்கெங்கயோ போராடினோம். ஆனால் அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனால், ஐயா கூட்டணிக்கு நாம் செல்வோம் என முடிவெடுத்து மத்திய அரசில் சுகாதாரத் துறை அமைச்சர் ஆனவுடனே அவ்வளவு நாள் நடத்தின போராட்டத்தை ஒரே நாளில் ஒரு கையெழுத்தில் முடித்து, தமிழ்நாடு மட்டுமில்ல இந்தியா முழுக்க புகையிலைக்கு தடை விதித்தோம்.

களத்துல எவ்வளவு போராட்டம் நடத்தினாலும் பொறுப்புல உட்கார்ந்து ஒரு நிமிஷத்துல அதை முடிச்சுட்டோம். இதை ஒரு உதாரணமா நான் சொல்றேன்.

இப்ப நம்ம நோக்கம் காவிரி டெல்டா பாதுகாக்கப்படணும். எதிர்காலத்து நம்ம சந்ததியும் இங்கே சோறு சாப்பிடணும். அதுக்கு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எல்லாம் வரக் கூடாது. ரெண்டு ஆட்சியிலயுமே மீத்தேன், ஹைட்ரோ கார்பன்னு கொண்டுவந்தாங்க. ஆனா, நம்ம நோக்கம் டெல்டா பாதுகாப்பா இருக்கணும். தோடத்துக்கு வந்த எடப்பாடிகிட்ட ஐயா சொன்னார், ‘டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமா அறிவிக்கணும்’னு. பதிலுக்கு அவர், ‘சரிங்க ஐயா’ என்று சொன்னாரு என்று  பேசி முடித்தார் அன்புமணி.