2026-ல் அன்புமணி கோட்டையில் உட்காரனும்.. உங்களுக்கு எதுக்கு பதவி.. பாமக நிர்வாகிகளை கலங்கடித்த ராமதாஸ்..
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அன்புமணியை முதலமைச்சராக வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அன்புமணியை முதலமைச்சராக வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஒரு வாரத்திற்கு ஒரு கிராமத்திற்குப் போக முடியாதா? என தொண்டர்களுக்கு கேள்வி எழுப்பிய அவர், அப்படி இல்லை என்றால் உங்களுக்கு எதற்கு பதவி என்றும் கேள்வி எழுப்பினார்.
சென்னை அடுத்த திருவேற்காட்டில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது, அதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கான தீர்மானத்தை பாமக தலைவர் ஜி.கே மணி முன்மொழிய அக்காட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் அதை வழிமொழிந்தனர். அதையடுத்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் அன்புமணி இராமதாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்டு வாழ்த்தினார். அப்போது பாமக தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அன்புமணி ராமதாசுக்கு வாழ்த்து தெரிவித்து ஆரவாரம் செய்தனர். அதைத்தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் மேடையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.
தாய் வரவில்லை தாயுள்ளத்தோடு தகப்பன் வந்து இருக்கிறேன், அன்புமணி புதிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு மாற்றம் உண்டாகும், 2026 ஆம் ஆண்டு அந்த மாற்றம் நிச்சயம் நிகழும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஐயப்ப பக்தர்களைப் போல கல்லையும் முள்ளையும் மெத்தையாக நினைத்து தமிழகம் முழுவதும் உள்ள 70 ஆயிரம் கிராமங்கள் நடந்து சென்று மக்களை சந்தித்திருக்கிறேன், நம் கட்சியை போன்ற அற்புதமான கொள்கைகள் இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும் இல்லை, அப்படி வேறு ஏதேனும் கட்சிகள் நம்மைப்போல் கொள்கைகள் வைத்துள்ளதா? கட்சியில் பொறுப்பு வாங்கி ஏழு மாதம் ஆகுது ஏன் இன்னும் நீங்கள் செயல்படுத் தவில்லை என்று மாவட்ட செயலாளரிடம் கேட்கிறேன். ரியல் எஸ்டேட் வியபாரத்தில் காட்டிய ஆர்வத்தை கட்சி வளர்ச்சியில் காட்டி இருக்கிறோம் என்று யாராவது சொல்ல முடியுமா? யார் படத்தை பெருசா போடுவது யார் படத்தை சிறியதாக போடுவது என்பதுதான் பிரச்சினை நடக்கிறது. திமுக ஒரு கட்டுப்பாடு உள்ள கட்சி, அது போன்ற பல கட்சிகள் இருக்கிறது, அவர்களை நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை.
100 பேர் 1000 ஆகவேண்டும் ஒரு கணக்குச் சொல்லி அனுப்பினேன் அதை செய்த ஒரு மாவட்ட செயலாளர் ஆவது இருக்கிறாரா? எழுந்து நின்று கையை உயர்த்துங்கள் பார்க்கலாம், யாரும் உயர்த்த மாட்டீர்கள். ஏனென்றால் அப்படி யாரும் செய்யவில்லை, எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம் ஆனால் என்னால் 100 வாக்கு வாங்க முடியும் என்று சொல்பவன் தான் உண்மையான பாட்டாளி, ஒரு வாரத்துக்கு ஒரு கிராமத்திற்கு போக முடியாதா? வேறு என்னதான் வேலை? எதற்கு தான் இந்த பதவி? இது என்ன அலங்காரப் பதவியா? நாற்பத்தி மூன்று ஆண்டுகாலம் உழைத்தவன் எனக்கு உங்களைத் தண்டிக்க எல்லா உரிமையும் உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் மூன்றாவது தலைவராக அன்புமணியை கோட்டையில் அமர வைப்போம் என்ற உறுதிமொழியை நீங்கள் எடுக்க வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதலோடு ஜிகே மணி அவர்களை பாமகவின் கவுரவ தலைவர் பொறுப்பு வழங்குகிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.