கோவை பாரதியார் பல்கலைக்கழக ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு சுரேஷ் என்பவரிடமிருந்து லஞ்சம் பெற்றபோது துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இடைத்தரகராக செயல்பட்ட வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார்.

கணபதி மீது ஏற்கனவே பல புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளன. சரியான ஆதாரங்களுக்காக காத்துக்கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை, சுரேஷை பயன்படுத்தி கணபதியை கைது செய்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கிய துணைவேந்தரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். மிகவும் துணிச்சலான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. 

பணி நியமன ஊழல் என்பது துணைவேந்தர் கணபதியுடனோ, பாரதியார் பல்கலைக்கழகத்துடனோ முடிந்துவிடுவதில்லை. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இந்த ஊழலில், அமைச்சர்களைத் தாண்டி முதலமைச்சர் வரை தொடர்புள்ளது. 

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அனைத்துத் துணைவேந்தர்களின் காலங்களிலும் பெருமளவில் ஊழல் நடந்துள்ளது. இதற்காகவே, அவர்கள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து துணைவேந்தர் பதவியை வாங்கினர். தமிழகத்தில் உயர்கல்வி தழைக்க வேண்டுமானால், ஊழல் கழகங்களாக மாறிவிட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சீரமைக்கப்பட வேண்டும். எனவே கடந்த 15 ஆண்டுகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நடந்த ஊழல்கள் பற்றி சி.பி.ஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.