Asianet News TamilAsianet News Tamil

இதை உடனடியாக மத்திய அரசு கவனத்துக் கொண்டு போங்க... தமிழக அரசை அலர்ட் செய்த அன்புமணி ராமதாஸ்...!

மார்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்ட விவகாரத்தைத் தமிழக அரசு உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்று கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Anbumani ramadoss urge state government to karnataka Dam matter  to central government
Author
Chennai, First Published Jul 3, 2021, 5:03 PM IST

மார்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்ட விவகாரத்தைத் தமிழக அரசு உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்று கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். நடுவர் மன்றத்திலும் இந்தச் சிக்கலை எழுப்பி அணையை அகற்ற ஆணையிட வலியுறுத்த வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை: “தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்குப் பாசன ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மிகப்பெரிய அளவில் புதிய அணை கட்டி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தென்பெண்ணை ஆற்றுச் சிக்கல் தொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தில் விசாரணையில் இருக்கும்போது கர்நாடகம் தன்னிச்சையாக அணை கட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

Anbumani ramadoss urge state government to karnataka Dam matter  to central government

காவிரி ஆற்று நீர் பிரச்சினையில் கர்நாடக அரசு எவ்வாறு அனைத்து விதிகளையும், ஒப்பந்தங்களையும், அறத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு சுயநலத்துடன் நடந்து கொண்டதோ, அதேபோல்தான் தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே புதிய அணை கட்டுவதிலும் நடந்துகொண்டது.

கர்நாடக மாநிலம் பங்கரபேட்டை ஒன்றியம் யார்கோள் கிராமத்தில் மார்கண்டேய நதியின் குறுக்கே 50 மீட்டர் உயரம், 430 மீட்டர் நீளத்திற்கு புதிய அணை கட்டும் பணியை அம்மாநில அரசு 2012ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அப்போதே பாட்டாளி மக்கள் கட்சியும், உழவர் அமைப்புகளும் அதைக் கண்டித்து கடுமையான போராட்டங்களை நடத்தியதன் பயனாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. அதனால் உழவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

மற்றொருபுறம், மார்கண்டேய நதியில் அணை கட்டத் தடைவிதிக்க வேண்டும், பெண்ணையாற்றின் குறுக்கே தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்தப் பாசனத் திட்டங்தையும் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை 2019ஆம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தென்பெண்ணையாற்றுச் சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்குமாறு மத்திய அரசை அணுகும்படி அறிவுறுத்தியது.

Anbumani ramadoss urge state government to karnataka Dam matter  to central government

அதன்படி தமிழக அரசும் மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. அதையேற்றுத் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைத்திருந்தால், மார்கண்டேய ஆற்றில் அணை கட்டப்படுவதைத் தடுத்திருக்கலாம். ஆனால், தீர்ப்பாயம் அமைப்பதில் மத்திய அரசு தேவையின்றி தாமதம் செய்தது. தீர்ப்பாயம் அமைக்கக் கோரி மத்திய அரசிடம் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு விண்ணப்பித்த போதே, மார்கண்டேய நதியில் அணை கட்டும் பணியில் 70% கர்நாடக அரசு முடித்துவிட்டது.

உடனடியாகத் தீர்ப்பாயம் அமைத்திருந்தால், அதற்குரிய நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அணை கட்டுமானத்திற்குத் தடை விதித்திருக்க முடியும். ஆனால், தீர்ப்பாயத்தை அமைப்பதற்கு பதிலாக பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைத்தது. இரு மாநிலங்களுக்கு இடையே பிப்ரவரி 24, ஜூலை 7ஆம் தேதி ஆகிய இரண்டு இரு முறை பேச்சு நடத்திய மத்திய அரசு குழு, அந்தப் பேச்சுகளில் உடன்பாடு எட்டப்படாததால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடுவர் மன்றத்தை அமைக்கும்படி கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது.

அப்போதே நடுவர் மன்றம் அமைத்திருந்தால் கூட அணையைத் தடுத்திருக்க முடியும். ஆனால், கடந்த ஆண்டு இறுதி வரை நடுவர் மன்றம் அமைக்கப்படாத நிலையில், அதையும், கரோனா சூழலையும் பயன்படுத்திக் கொண்டு கர்நாடகம் அணை கட்டி முடித்துவிட்டது. தென்பெண்ணையாறு கர்நாடகத்தில் தோன்றினாலும் அம்மாநிலத்தில் மிகக் குறைந்த தொலைவுக்கு மட்டுமே ஓடுகிறது.

Anbumani ramadoss urge state government to karnataka Dam matter  to central government

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஓடி கடலூர் மாவட்டத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென்பெண்ணையின் நீர் ஆதாரமாகத் திகழ்வது மார்கண்டேய நதிதான். இப்போது அந்த ஆற்றில் அணை கட்டப்பட்டு விட்டது. அதில் 165 அடி உயரத்திற்குத் தண்ணீரைத் தேக்க முடியும். அரை டி.எம்.சி மட்டும்தான் தண்ணீரைத் தேக்க முடியும் என்று கூறப்பட்டாலும் 2 டிஎம்சி வரை நீரைத் தேக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

165 அடி உயர அணை நிரம்பினால்தான் மார்கண்டேய ஆற்றிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் வந்து தென்பெண்ணையாற்றில் கலக்கும். இப்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால் தமிழ்நாட்டில், தென்பெண்ணை ஆற்றைப் பாசன ஆதாரமாக நம்பியுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, திருண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும். இம்மாவட்டங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

1892ஆம் ஆண்டில் சென்னை - மைசூரு மாகாணங்களுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஆறும் வருகிறது. அந்த ஒப்பந்தத்தின்படி முதல்மடை பாசனப் பகுதிகளில் எதைச் செய்வதானாலும், கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டும். ஆனால், அதை மதிக்காமல் கர்நாடகம் தன்னிச்சையாக அணை கட்டியிருப்பது நடுவர் மன்றத்தை அவமதிக்கும் செயல்.

Anbumani ramadoss urge state government to karnataka Dam matter  to central government

இது இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும். இந்த விவகாரத்தைத் தமிழக அரசு உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். நடுவர் மன்றத்திலும் இந்தச் சிக்கலை எழுப்பி சட்டவிரோதமாக, அனுமதியின்றிக் கட்டப்பட்ட அணையை அகற்ற ஆணையிடும்படி வலியுறுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios