‘உயிரைக் குடிக்கும் டாஸ்மாக் கடைகளின் மதுப்புட்டிகளை பாதுகாப்பதில் காட்டப்படும் அக்கறை, உயிரைக் காக்கும் உணவான நெல் மூட்டைகளை காப்பதில் காட்டப்படுவதில்லை’ என்று தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.
தென் தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக 20 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், 'காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள 170 மையங்களில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த 70 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகிவிட்டன. அதனால், அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் அரசின் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாதது தான் இதற்கு காரணமாகும். எப்போது மழை பெய்தாலும் அதனால் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லோ, அரசு கொள்முதல் செய்த நெல்லோ சேதமடைவது வாடிக்கையாகி விட்டது. நெல் கொள்முதல் நிலையங்களில் குறைந்தது 5000 மூட்டைகள் இருப்பு வைக்க வசதி தேவை. கொள்முதல் செய்யப்படும் மூட்டைகள் இரு நாட்களுக்கு ஒருமுறை கிடங்குகளுக்கோ, அரவை ஆலைக்கோ கொண்டு செல்லப்பட வேண்டும்.

அதற்கான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். உயிரைக் குடிக்கும் டாஸ்மாக் கடைகளின் மதுப்புட்டிகளை பாதுகாப்பதில் காட்டப்படும் அக்கறை, உயிரைக் காக்கும் உணவான நெல் மூட்டைகளை காப்பதில் காட்டப்படுவதில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
