Asianet News TamilAsianet News Tamil

வறட்சி நிவாரணம்  யானைப்பசிக்கு சோளப்பொரி அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

anbumani ramadoss-statement-against-cm-edappadi-announc
Author
First Published Feb 22, 2017, 1:52 PM IST


ஓபிஎஸ் அறிக்கையில் கூடுதலாக சில பக்கங்கள் சேர்த்துள்ளீர்கள்  அதைத்தவிர வறட்சி நிவாரண அறிவிப்பில் ஒன்றுமில்லை என  அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரண உதவித் தொகையை முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். அவரது அறிவிப்பில் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை. 

வறட்சி நிவாரணம் குறித்து கடந்த 10.01.2017 அன்று அப்போதைய முதலமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் சில பத்திகளை மட்டும் கூடுதலாக சேர்த்து வெளியிட்டிருக்கிறார்.

பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையை விட பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் சில பத்திகள் கூடுதலாக இருக்கின்றனவே தவிர உழவர்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண நிதிஉதவி  எந்த வகையிலும் உயர்த்தப்படவில்லை. 

நெல்லுக்கு ரூ.5465, நீண்ட கால பயிர்களுக்கு ரூ.7287, மானாவாரி பயிர்களுக்கு ரூ.3000 என்ற அளவில் மட்டுமே இழப்பீடு வழங்குவது போதுமானதல்ல. தமிழக அரசால் நடத்தப்படும் கோவை வேளாண் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, தமிழகத்தில் ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய மொத்தம் ரூ.83,683 செலவு ஆவதாக கண்டறியப்பட்டுள்ளது.

 அதன்படி பார்த்தால் ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.33,475 செலவாகிறது. கடும் வறட்சியால் பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு இந்த அளவு தொகையை இழப்பீடாக வழங்குவது தான் முறையானதாக இருக்கும். இதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.

நெல்லுக்கு பயிர்க்காப்பீடு மூலம் ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.4800 மட்டுமே கிடைக்கும் என்பதால், அதைக் கழித்து குறைந்தபட்சம் ரூ.25000 முதல் ரூ.30,000 வரை நிதி உதவி வழங்குவது தான் நியாயம் ஆகும். ஆனால் ஏக்கருக்கு ரூ.5465 மட்டுமே வழங்கப்படும் என்பது யானைப்பசிக்கு சோளப்பொரியாகவே அமையும். 

கடந்த 2012&13 ஆம் ஆண்டில் கடுமையான வறட்சியால் பயிர்கள் கருகிய நிலையில், பயிர்க்காப்பீடு, பேரிடர் நிவாரண உதவி ஆகியவற்றை சேர்த்து ஏக்கருக்கு ரூ.15,000 நிதி உதவி வழங்கப்படும்  என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

 அப்போது அந்த நிவாரண நிதி உதவி போதுமானதல்ல என்று கூறி உழவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், இப்போது பயிர்க்காப்பீடு, நிவாரணம்  இரண்டையும் சேர்த்தாலும் ஏக்கருக்கு ரூ.10,000 என்ற அளவுக்கு கூட உதவி கிடைக்க வாய்ப்பில்லை. இது உழவர்களின் துயரத்தைத் துளி கூட தீர்க்காது.

வறட்சி நிவாரணத்திற்காக முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணத் தொகையில் பல குளறுபடிகள் உள்ளன. உதாரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5465 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மொத்தம் 28,99,877 விவசாயிகளுக்குச் சொந்தமான  46,27,142 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு, அதாவது நெல்லுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

அதன்படி, நெல்லுக்காக மட்டும் ரூ.2529 கோடி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், ரூ.2049 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதைக் கொண்டு ஏக்கருக்கு சராசரியாக ரூ.4428 மட்டுமே வழங்க முடியும். அதேபோல்,

தோட்டப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.7287 வழங்கப்படும் என்றும், 4,04,326 ஏக்கர் நிலங்களில் தோட்டப்பயிர்கள் சேதமடைந்திருப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். 

இதற்கான இழப்பீட்டுக்கு ரூ.294 கோடி தேவைப்படும் நிலையில், ரூ.197 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதைக்கொண்டு ஏக்கருக்கு ரூ.4872 மட்டுமே வழங்க முடியும். தமிழக அரசு அறிவித்துள்ள உதவி மிகவும் குறைவு எனும் நிலையில், அது கூட முழுமையாக வழங்கப்படாது என்று தான் தோன்றுகிறது.

உழவர்களுக்கு அறிவித்துள்ள இழப்பீடு போதாது என்பதால், நிபந்தனையின்றி, நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25,000, நீண்டகால பணப்பயிர்களுக்கு சந்தை மதிப்புக்கு ஏற்றவகையில் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். 

அதிர்ச்சி மற்றும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த உழவர்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விவரங்கள் பெறப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என்று கடந்த மாதம் அப்போதைய முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், இப்போதைய முதலமைச்சரின் அறிவிப்பில் அதுகுறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

 கடந்த 4 மாதங்களில் சுமார் 300 உழவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios