திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணும் கனவு ஒருபோதும் பலிக்காது என தருமபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக கூறியுள்ளார். 

தருமபுரி வள்ளலார் திடலில் நேற்று இரவு பாமக நிறுவனர் ராமதாஸ் 80-வது முத்துவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பாட்டாளி இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூட்டத்தில் பேசியதாவது:- மனசாட்சி இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் விவசாய கடன்கள் ரத்து, கல்விக் கடன் ரத்து, வங்கிக் கடன் ரத்து என்று புளுகு மூட்டை அவிழ்த்துவிடுகிறார். மு.க.ஸ்டாலினால் சட்டையை மட்டும் தான்கிழிக்க தெரியும். 

18 நாட்களில் நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து விடுவதாக மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், அவர் காணும் கனவு என்றும் பலிக்காது. 50 ஆண்டுகளில் 22 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்த தி.மு.க. தமிழகத்திற்கு என்ன செய்தது. இனி வந்தும் என்ன செய்யபோகிறார் என அன்புடணி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தமிழகத்தில் தற்போது நடைபெறும் அனைத்து பிரச்சனைகளுக்கு காரணம் திமுக தான். காவேரி விவகாரம், நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த திமுக, தற்போது, முதலை கண்ணீர் வடிப்பதாக அன்புமணி குற்றம்சாட்டினார்.