அதிமுகவின்  3 அணியினரும் கூட்டுக் கொள்ளையர்கள் என்றும்  420 என்ற வார்த்தையை கூறுவதால் டி.டி.வி. தினகரன் யோக்கினமானவர் இல்லை என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்...

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஒரு நாள் விழிப்புணர்வு பேரணி நடத்தியதாக கூறினார்.

மக்களின் 55 ஆண்டு கால கோரிக்கையான இந்த திட்டம் நிறைவேறினால் 3 மாவட்டங்கள் மிகவும் பயன் பெறும் என்றும்  பவானி ஆற்றில் இருந்து ஆண்டுக்கு 20 முதல் 100 டி.எம்.சி. வரை மழைநீர் கடலில் கலந்து வீணாவதாகவும் அவர் கூறினார்.

வெறும் அறிவிப்போடு நிற்கும் இந்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும்  இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றும் அன்புமணி தெரிவித்தார்.

நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்திய அன்புமணி, நீட் தேர்வை போலவே டெங்கு காய்ச்சலும் தமிழகத்தில் தீர்க்க முடியாத பிரச்சினையாக உள்ளது என கூறினார்.

அ.தி.மு.க.வின் 3 அணியினரும் கூட்டுக் கொள்ளையர்கள். 3 பேருமே மத்திய அரசு சொல்வதை தான் கேட்கின்றனர். 420 என்ற வார்த்தையை கூறுவதால் டி.டி.வி. தினகரன் யோக்கினமானவர் இல்லை. அவர்களுக்கு பிரச்சினை வரும் போது ஒருவரையொருவர் மாட்டி விடுகிறார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.