சென்னை மக்களுக்கு தூய சுவாசக்காற்றை அளிப்பதன் மூலம் சுமார் ஒரு கோடி மக்களின் வாழ்நாளை அதிகரிக்க முடியும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் மக்களின் நலவாழ்வை உறுதி செய்வதற்காகவும், அனைவருக்கும் தூயக்காற்று கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உலகில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 12 லட்சமாக உள்ளது. இந்தியர்களின் மரணத்துக்கு மூன்றாவது பெரிய காரணம் காற்று மாசுபாடுதான்.

இந்தியாவில் உயிரிழக்கும் 8 பேரில் ஒருவர் காற்று மாசுபாடு காரணமாக இறக்கிறார். ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பல நோய்களை காற்று மாசுபாடு உருவாக்குகிறது. 43% நுரையீரல் நோய்களுக்கும், 27% நுரையீரல் 24% பக்கவாத பாதிப்புக்கும், 25% இதய நோய் பாதிப்புக்கும் காற்று மாசுபாடு காரணம். இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வாழும் குழந்தைகளின் வாழ்நாளில் இரண்டரை ஆண்டுகள் காற்று மாசுபாட்டால் குறைகிறது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சென்னையில் வாழும் எல்லா மக்களையும், குறிப்பாக குழந்தைகளை காற்று மாசுபாடு கடுமையாக பாதிக்கிறது.
ஒரு கனமீட்டர் காற்றில் PM 2.5 நுண்துகள் மாசு 10 மைக்ரோகிராம் அளவுக்குள் இருக்க வேண்டும். ஆனால், சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் 100 மடங்கு அதிகமாக உள்ளது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் உண்மையாகும். சென்னையில் கடந்த ஆண்டில் PM 2.5 நுண்துகள் மாசு 300 அளவை கடந்து 450 எனும் அபாய அளவை எட்டியது. கொடுங்கையூரில் உச்சமாக 935 எனும் அளவினை எட்டியது. இதை உடனடியாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவது சாத்தியம் இல்லை. அதனால், இதை இந்தியாவில் முதல் கட்டமாக 35 எனும் அளவுக்குள் குறைக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இந்திய அரசு 40 மைக்ரோகிராம் என்பதை உச்ச அளவாக அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கிற்கு முன்பு, சென்னையில் ஆண்டுக்கு 100 நாட்கள் நச்சுக்காற்றை சுவாசிக்கும் நிலையில் மக்கள் வாழ்ந்தனர். சென்னை மாநகரின் காற்று மாசு அளவு, மணலி காற்று மாசு கண்காணிப்பு கருவி பதிவுகள் படி, கடந்த நவம்பர் 5 வரையிலான 365 நாட்களில், 119 நாட்கள் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக இருந்துள்ளது. சென்னையின் 15 இடங்களில் பொது அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில் அனைத்து இடங்களிலுமே 70 மைக்ரோ கிராம் அளவுக்கு மேல் 187 மைக்ரோ கிராம் வரை இருந்தது கண்டறியப்பட்டது. மொத்தத்தில் சென்னையில் மக்கள் சுவாசிக்கும் காற்று ஆபத்தாகவே உள்ளது.
கொரோனா ஊரடங்கின் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு கணிசமாக குறைந்திருந்தது. ஆனால், இதற்காக மக்கள் கொடுத்துள்ள விலை மிக அதிகம். மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்புகளை சந்தித்துதான் இந்த நிலையை எட்டியுள்ளோம். இது வரவேற்கதக்க மாற்றம் இல்லை. மாறாக, பொருளாதார இழப்புகள் இல்லாமலேயே தூயக் காற்றை உருவாக்க முடியும். அதற்கான வழிமுறைகளும் தொழில்நுட்பங்களும் உள்ளன. அவை சாத்தியமானவைதான்.
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கட்டுள்ள நிலையில், காற்று மாசுபாடு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னையில் காற்று மாசுபாட்டை தடுக்க திட்டமிட்ட செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். சென்னை மக்களுக்கு தூய சுவாசக்காற்றை அளிப்பதன் மூலம் சுமார் ஒரு கோடி மக்களின் வாழ்நாளை அதிகரிக்க முடியும். மேலும், புவிவெப்படையக் காரணமான பசுங்குடில் வாயுக்களை குறைக்கவும் முடியும்.

