ராமேஸ்வரம் கடல்பகுதியில் நேற்று தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஜேசு என்கிற மீனவரின் கண்ணில் அடிபட்டு சிகிச்சையில் இருக்கிறார். இந்த சம்பவம் தற்போது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ராமேஸ்வரம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் வங்கக் கடலில் கச்சத் தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா் அப்பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளனா். அதை ஏற்க மறுத்த மீனவா்கள் இந்திய கடல் எல்லைக்குள்தான் மீன்பிடித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினா், தமிழக மீனவா்களின் படகுகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனா்.

இதில், ஜேசு என்ற மீனவரின் கண் அருகே துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் மீனவா்களுக்கு பொருள் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை படையினா் தாக்குதல் நடத்தியிருப்பதை சகித்துக் கொள்ள முடியாது. இது இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக தில்லியில் உள்ள இலங்கை தூதரை இந்திய அரசு அழைத்து கண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.