தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறப்பதற்காக தமிழக அரசு சார்பில் கூறப்படும் காரணம் ஏற்கத்தக்கது அல்ல. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று மது அருந்துவது இயல்பாக நடைபெறும் ஒன்றுதான். இரு மாநிலங்களின் எல்லைகளை ஒரு சாலையோ, ஒரு வீதியோ மட்டும்தான் பிரிக்கும் என்ற சூழலில் எல்லையில் உள்ளவர்கள்தான் அண்டை மாநிலத்திற்கு செல்வார்கள். இது புறக்கணிக்கத்தக்க அளவில் மிகச் சில பகுதிகளில் விதிவிலக்காக நடக்கும் நிகழ்வே. இதையே விதியாகக் கருதிக் கொண்டு சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் மதுக்கடைகளைத் திறப்பது உடல்நலக் கேடுகளையும், சமூக நலக் கேடுகளையும், சட்டம் & ஒழுங்கு பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதுடன், குற்றங்கள் அதிகரிப்பதற்கும்தான் வழி வகுக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.
படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதுதான் இன்றைய அரசின் வழிகாட்டியாக கூறப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆணை காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனைத்து தரப்பிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தமிழக அரசு அதன் முடிவை தளர்த்திக் கொள்ளாததும், மதுக்கடைகளை நாளை திறக்க ஏற்பாடுகளை செய்து வருவதும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு தவறான நேரத்தில் மேற்கொள்ளப்படும் மிகத் தவறான நடவடிக்கை.
வரலாற்றில் சில வாய்ப்புகள் மிகவும் அரிதாகவும், அதிசயமாகவும்தான் கிடைக்கும். அத்தகையதொரு வாய்ப்புதான் தமிழக அரசுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் 23 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 1971-ம் ஆண்டில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. அதன்பின் சில ஆண்டுகளுக்கு மதுக்கடைகள் திறக்கப்படுவதாகவும், மூடப்படுவதாகவும் இருந்த நிலை மாறி 1981-ம் ஆண்டு முதல் மது வணிகம் தடையின்றி நடைபெற்று வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக நீடித்து வந்த இத்தகைய நிலையை மாற்றி, தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை கடந்த 40 நாட்கள் ஊரடங்கு உருவாக்கிக் கொடுத்தது. மிக மிக அரிதான அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு , மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம் வரலாறு படைப்பதற்கான வாய்ப்பை தமிழக அரசு தவற விட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறப்பதற்காக தமிழக அரசு சார்பில் கூறப்படும் காரணம் ஏற்கத்தக்கது அல்ல. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று மது அருந்துவது இயல்பாக நடைபெறும் ஒன்றுதான். இரு மாநிலங்களின் எல்லைகளை ஒரு சாலையோ, ஒரு வீதியோ மட்டும்தான் பிரிக்கும் என்ற சூழலில் எல்லையில் உள்ளவர்கள்தான் அண்டை மாநிலத்திற்கு செல்வார்கள். இது புறக்கணிக்கத்தக்க அளவில் மிகச் சில பகுதிகளில் விதிவிலக்காக நடக்கும் நிகழ்வே. இதையே விதியாகக் கருதிக் கொண்டு சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் மதுக்கடைகளைத் திறப்பது உடல்நலக் கேடுகளையும், சமூக நலக் கேடுகளையும், சட்டம் & ஒழுங்கு பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதுடன், குற்றங்கள் அதிகரிப்பதற்கும்தான் வழி வகுக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.
மதுக்கடைகளைத் திறப்பது தனித்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இன்றைய கொரோனா பரவல் சூழலையும் கருத்தில் கொண்டுதான் இதைப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் போயிருப்பதற்கான முக்கியக் காரணங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளும், சமூக இடைவெளியும் முழுமையாக கடைபிடிக்கப்படாததுதான். மதுக்கடைகள் திறக்கப்பட்டால் இந்த இரு விதிகளையும் பெயரளவுக்குக்கூட கடைபிடிக்க முடியாது. அது இன்னும் அதிக வேகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவுவதற்கே வழிவகுக்கும். அது மிகவும் ஆபத்தானது. அது மட்டுமின்றி, கொரோனா பரவல் காலத்தில் மது கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.