anbumani join hand with kamal hassan

தி.மு.க மட்டும் அல்ல பா.ம.கவும் கூட ரஜினியை தான் தனது அரசியல் எதிரியாக கருதுகிறது. இதனால் தான் கமலுடன் கரம் கோர்த்து ரஜினியை எதிர்க்க முடிவு செய்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

 சினிமா ரசிகர்களை நாடாள அனுமதிக்கவே கூடாது என்பது தான் பா.ம.கவின் தாரக மந்திரம். ஆனால் கமல் விஷயத்தில் இந்த மந்திரம் பா.ம.கவுக்கு மறந்துவிட்டது. காரணம் ரஜினி. அறிவித்தது போல் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் கண்டிப்பாக தங்கள் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும் என்று பா.ம.க கருதுகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட பா.ம.கவால் வெல்ல முடியாது. அன்புமணியே கூட சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார்.

 அதே சமயம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் தருமபுரியில் அன்புமணியால் வெல்ல முடிந்தது. எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி என்பது பா.ம.கவிற்கு முக்கியம். தி.மு.கவிடம் சென்று தொகுதிகளை ஒதுக்குமாறு கெஞ்சக்கூடாது என்று பா.ம.க கருதுகிறது.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க – தி.மு.கவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற ஒரு எண்ணமும் அன்புமணிக்கு இருக்கிறது. இதன் முதல் கட்டமாகவே இரண்டு மாதங்களுக்கு முன்னர் கமல் அழைத்த உடன் அவர் ஏற்பாடு செய்த அனைத்து கட்சி கூட்டத்தில் நேரில் சென்று அன்புமணி கலந்து கொண்டார். மேலும் கமலை, தொகுதி ஒதுக்கீடு போன்ற சமயங்களில் எளிமையாக பணியவைத்துவிடலாம் என்றும் பா.ம.க நம்புகிறது.

இதனால் கமலுக்கு எதிரியாக இருக்க கூடிய ரஜினியை எதிர்க்க அன்புமணி முடிவு செய்துள்ளார். அதன் முதற்கட்டமாகவே காலா படத்திற்கு டிக்கெட் கட்டணத்தை குறைக்க ரஜினி முன்வர வேண்டும் என்று ஒரு அறிக்கையை அன்புமணி வெளியிட்டார். மேலும் சிஸ்டம் சரியில்லை எனும் ரஜினி முதலில் தனது படத்திற்கான டிக்கெட் கட்டண சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து ரஜினிக்கு எதிராக அரசியல் செய்து கமல், தினகரன் போன்றோரை ஓரணியில் சேர்க்க பா.ம.க முயலும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து கமலுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கேற்கவும் அன்புமணி முடிவு செய்துள்ளார்.