தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு ஆக்சுவலா இன்னும் முழுசா ஒரு வருஷமிருக்குது. ஆனால் பா.ம.க.வுக்கு என்னதான் அவசரமோ தெரியலை, இந்த மார்ச் 1-ம் தேதியன்னைக்கே தங்கள் கட்சியோட ‘தேர்தல் சிறப்பு பொதுக்குழு’வை சென்னை அருகே திருவேற்காட்டில் நடத்திடுச்சு. (காங்கிரஸெல்லாம் அடுத்த வருஷம் மார்ச் 31-ம் தேதியானாலும் கூட தேர்தலை பற்றி பெருசா யோசிக்காம ஒக்காந்தேயிருக்கும்!)
இந்த கூட்டத்தில் பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, மற்றும் இளைஞரணி செயலாளர் அன்புமணி  உள்ளிட்ட அத்தனை முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

பொதுவாக மனதினுள் எதையும் வைத்துக் கொள்ளாமல் பட்டாசாக வெளிப்படையாக வெடிப்பதும், பிறரை விமர்சிப்பதும், சொந்தக் கட்சியினரை திட்டுவதும்தான் ராமதாஸின் இயல்பு. கட்சி ஆரம்பிச்சு இத்தனை வருஷமாகியும் நாம இன்னும் தேறலையே! வட தமிழகத்தின் இத்தனை மாவட்டங்களில் இவ்வளவு வன்னியர்கள் இருந்தும்  அவங்க வாக்குகள் நமக்கு முழுமையாக விழலையே! என்று மனுஷன் திட்டுவது போலவே சற்று புலம்பியும் கொட்டுவார். ஆனால் இந்த முறை இந்த ட்ரிக்கை அன்புமணி கையில் எடுத்துவிட்டார்! என்கிறார்கள் அக்கட்சியினர். அவர் கட்சியை திட்டுவது போலவே தன்னைத்தானே மேடையில் அசிங்கப்படுத்திக் கொண்டார்! என்கின்றனர். “கருணாநிதி, ஜெயலலிதா எனும் இரு தலைவர்கள் இல்லாத பொதுத்தேர்தலை நாம் சந்திக்க உள்ளோம். தி.மு.க. 37 தொகுதிகளில் பணத்தை இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, தி.மு.க. பணத்தையும், பிரசாந்த் கிஷோர் எனும் வடமாநில ஆலோசகரையும் நம்பி உள்ளது. 

 

என் 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை 27 அமைப்புகளை உருவாக்கியுள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களில் நம் கட்சியில் ஆசிரியர் அணி, வணிகர் அணி, அரசு ஊழியர்கள் அணி என  மூன்று அமைப்புகளை உருவாக்க உள்ளேன்.” என்று தன் புகழையும் சேர்த்துப் பாடினார். 
அதன் பின் மைக் பிடித்த அன்புமணி “தி.மு.க. துவக்கப்பட்டு பதினெட்டு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது. பா.ம.க. உதயமாகி 32 ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் தற்போது நம் கட்சிக்கு தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் ஒருவர் கூட இல்லை என்பது வருத்தமாக உள்ளது. ஆனாலும் அதுதானே உண்மை. தேர்தலில் ஒருங்கிணைந்த உழைப்பு வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்!” என்று பேசியிருக்கிறார். அன்புவின் இந்த அதிரடிதான் அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை கலவரமாக்கியுள்ளது. “எப்பவுமே சின்னய்யா அன்புமணி தன்னை உயர்ந்த இடத்திலேயே வெச்சுதான் பேசுவார்.  ஆனால் இந்த முறை கட்சியை திட்டுறதா சொல்லி, தன்னைத்தானே அசிங்கப்படுத்திக்கிட்டார். இப்ப அவர் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார். 

 

ஆக்சுவலா இது அ.தி.மு.க.கிட்ட போராடி, ஒப்பந்தம் போட்டு பெற்ற பதவி. அவர் அந்தப் பதவியில் இருப்பதை நாங்க பெருமையாக நினைக்க, அவரோ ‘ஒருத்தன் கூட நம்ம கட்சியில தேர்தலில் ஜெயிச்சு பதவி வாங்கிய ஆளா இல்லை’ன்னு சொல்லியிருக்குறது சுருக்குன்னு இருக்குது. சின்னவரு தன்னைத்தானே கேவலப்படுத்திக்கிறாரே. இதைக்கேட்டுட்டு மருத்துவரய்யாவுக்கே முகம் சுண்டிப்போச்சு.” என்றனர். ஆனால் இதற்கு விளக்கம் தரும் ஜி.கே.மணி போன்ற மேல்நிலை நிர்வாகிகளோ ‘சுய விமர்சனம், சுய பரிசோதனை இருந்தால்தான் வளர்ச்சி கிடைக்கும். சின்னய்யாவுக்கு தன்னோட பதவி முக்கியமில்லை, நாம எல்லோரும் தேர்தலில் மக்கள் ஆதரவில் வென்று பதவிகளில் போய் அமரணும்! அதுதான் நோக்கம். அதுதான் அவருக்கு உண்மையான மகிழ்ச்சி.” என்றிருக்கிறார். ம்ம்ம்ம்ம்ம் முடியல!