கவுன்சிலராக கூட இருக்க தகுதியில்லாதவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார் என பழனிசாமியை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது அன்புமணியும் சீமானும் தான். ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகுதான் ரஜினி, கமல் ஆகியோருக்கு தனிக்கட்சி தொடங்கி அரசியல் மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற தைரியம் வந்திருக்கிறது.

ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலில் அரசியல் மாற்றம் என்ற முழக்கத்தை எழுப்பி 234 தொகுதிகளிலும் பாமகவும் நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிட்டது. 

கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு மற்றும் அரசு சேவைகள் அனைத்திற்குமான தெளிவான திட்ட விளக்கங்களுடன் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து தமிழக மக்களிடம் வலியுறுத்துகிறார். 

இந்நிலையில், தஞ்சாவூரில் காவிரி பாசன விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் பாமக சார்பில் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற ஒன்று மட்டும்தான் உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஆறுதல் அளிக்ககூடியதாக உள்ளது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றுதான். மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவில் போராட்டங்கள் வெடிக்கும். அந்த போராட்டம் எங்கள் பாணியில் இருக்கும் என அன்புமணி எச்சரிக்கை விடுத்தார்.

ஒரு கவுன்சிலர் பதவிக்குத் தகுதியில்லாதவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். அவருக்கு நிர்வாகம் மற்றும் மக்கள் பிரச்னைகள் ஆகியவை எல்லாம் என்னவென்றே தெரியாது. இவர்கள் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் இன்றைக்கு எவ்வளவு கல்லா கட்டலாம் என்ற நினைப்பில்தான் அலுவலகத்துக்கே செல்கின்றனர் என கடுமையாக விமர்சித்தார்.