anbumani condemns tamilnadu government
கரும்பு நிலுவைத் தொகைக்கான உறுதிமொழியை காப்பாற்றாமல் அரசு துரோகம் செய்வதா? என தமிழக அரசுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்களித்த மக்களுக்கும், வாழ வைக்கும் விவசாயிகளுக்கும் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் வழக்கம் தங்களுக்கு இல்லை என்பதை தமிழக ஆட்சியாளர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்றும் உழவர்களை நம்ப வைத்து துரோகம் செய்த தமிழக அரசின் செயலை கண்டிப்பதாகவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தனியார், பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு அதற்குரிய விலை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய விலையில் குறிப்பிட்ட தொகையை வழங்காமல் நிலுவையில் வைத்துக் கொள்கின்றன.
அந்த வகையில் மட்டும் 24 தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.1454.56 கோடி, 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ரூ.198.44 கோடி, இரு பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் ரூ.48.35 கோடி என மொத்தம் ரூ.1701.35 கோடி நிலுவை வைத்துள்ளன. இவற்றை திரும்பப்பெற விவசாயிகள் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காத நிலையில், கடந்த 14-ஆம் தேதி தமிழக அரசுடன் கரும்பு விவசாயிகள் பேச்சு நடத்தினர்.
தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுக்களின்போது, விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் டன் ஒன்றுக்கு ரூ.125 வீதம் 110 கோடி ரூபாயை தீபாவளிக்கு ஒருநாள் முன்பாக கடந்த 17-ஆம் தேதி வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதேபோல், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.198.44 கோடியில் ரூ.12.26 கோடி தீபாவளிக்கு முன்பாக வழங்கப்படும் என அமைச்சர் முன்னிலையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், தீபாவளி முடிந்து 5 நாட்களாகியும் இதுவரை நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. எப்போது வழங்கப்படும் என்பதும் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகளுக்கு, கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்காததால் கடனிலிருந்து மீள முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். நிலுவைத் தொகையைப் பெற்று தீபாவளியைக் கொண்டாடலாம் என நம்பிய விவசாயிகளின் நினைப்பில் மண்ணைவாரி போட்டு விவசாயிகளுக்கு அரசு துரோகம் செய்துவிட்டது.
2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் சுமார் ரூ.900 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டியிருந்தது. அந்த தொகையை ஒரு சில மாதங்களில் விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், அதன்பின் 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், நிலுவைத் தொகை இரு மடங்காக உயர்ந்திருக்கிறதே தவிர, குறையவில்லை. இதுதொடர்பாக ஆட்சியாளர்கள் அளித்த உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் எழுதப்பட்ட எழுத்தாக கரைந்துவிட்டன.
கரும்புக்கு போதிய கொள்முதல் விலை வழங்கப்படாததாலும், நிலுவைத் தொகை அதிகரிப்பதாலும் பெரும்பாலான உழவர்கள் கரும்பு சாகுபடியைக் கைவிட்டு வேறு பயிர்களுக்கு சென்று விட்டனர். இதனால் நடப்பாண்டில் தமிழகத்தில் கடுமையான சர்க்கரைத் தட்டுப்பாடு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாற வேண்டுமானால் கரும்பு சாகுபடி லாபமானதாக மாற வேண்டும். அதற்காக சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை இம்மாத இறுதிக்குள் பெற்றுத் தரவும், கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4000ஆக உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
