எட்டு மணி நேரத்தில் மேட்டூர் அணை தூர் வாரும் பணியை ‘‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’’ என்பது போன்று  முடக்கிவிட்டனர் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1934 ஆம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டது. கடந்த 83 ஆண்டுகளில் இது வரை மேட்டூர் அணை தூர் வாரப்படவில்லை. வெள்ளப்பெருக்கு மற்றும் மழை காரணமாக சுமார் 20 சதவீத அளவுக்கு சகதி படிந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 83 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக மேட்டூர் அணையில் தூர் வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 28 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இதில் வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசாமாக எடுத்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக என்ற அறிவிப்புடன் தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மேட்டூர் அணையை தூர்வாரும் பணிகள் ஒரே நாளில் முடங்கிவிட்டன.

தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்து திட்டத்தின்படி தொடங்கப்பட்ட தூர்வாரும் பணிகளுக்கும் இதேநிலை தான் ஏற்பட்டிருக்கிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

மேட்டூர் அணையை தூர் வாருவதால் அணையின் கொள்ளளவு 10% வரை அதிகரிக்கும் என்றெல்லாம் முதலமைச்சர் வீரவசனம் பேசினார். ஆனால், ‘‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’’ என்பதைப் போன்று எடப்பாடி பழனிசாமியால் ஆடம்பரமாக தொடங்கி வைக்கப்பட்டத் திட்டம் 8 மணி நேரத்தில் முடங்கியிருக்கிறது.

முதலமைச்சர் முன்னிலையில் சில வாகனங்களுக்கு மட்டும் இலவசமாக மண் வழங்கிய அதிகாரிகள், முதலமைச்சர் அங்கிருந்து சென்ற பின்னர் ஒரு டிராக்டருக்கு ரூ.100 கட்டணம் செலுத்தினால் தான் வண்டல் மண் வழங்க முடியும் என்று கூறிவிட்டனர்.

இதனால் உழவர்கள் மண் வாங்குவதற்கு மறுத்து வெளியேறிவிட்ட நிலையில், மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.

மேட்டூர் அணையை தூர்வாரும் திட்டத்திற்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

விளம்பரத்திற்காக தூர்வாரும் திட்டத்தை அறிவித்து விட்டு, அதற்கு நிதியை ஒதுக்காதது தான் இப்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கெல்லாம் காரணமாகும்.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பராமரித்து, மேலாண்மை செய்வதற்கு தமிழக அரசிடம் தெளிவான கொள்கையோ, செயல்திட்டமோ இல்லை. அதனால் தான் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் சீரழிந்து வருகின்றன.

கங்கை கொண்ட சோழபுரம் அருகில் சோழ மன்னர்களால் வெட்டப்பட்ட பொன்னேரியை கடந்த 1995 நவம்பர் 1,2ஆகிய தேதிகளில் ராமதாஸ்  தலைமையிலான குழுவினர் தூர்வாரினார்.

இரு நாட்களும் இரவு பகலாக ஏரியிலேயே தங்கி இளைஞர்களுடன் சேர்ந்து, எந்திரத்தின் உதவியின்றி கைகளாலேயே மண்ணை வெட்டி சுமந்து தூர்வாரிய பெருமை ராமதாசுக்கு உண்டு.

அதேபோல், இராமநாதபுரம் மாவட்டத்தின் ஆர்.எஸ்.மங்கலம் ஏரியையும் நாங்கள் தூர்வாரினோம்.

தற்போது ஒரு லாரி வண்டல் மண்ணுக்கு ரூ.1500 வீதம் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கையூட்டு வாங்கிக் கொண்டு மணல் கொள்ளையை தாராளமாக அனுமதிக்கின்றனர்.

எனவே ஒவ்வொரு நீர்நிலையையும் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களைக் கொண்டு ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தூர்வாரும் வகையில் புதிய நீர்நிலை மேலாண்மைத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.