கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசு.! நீதிமன்ற கெடு முடிந்தும் அமைக்காதது பெரும் அநீதி.!அன்புமணி ஆவேசம்
தமிழ்நாடு - கர்நாடகம் இடையிலான தென்பெண்ணையாறு ஆற்றுநீர்ச் சிக்கலைத் தீர்ப்பதற்காக மார்ச் 14-ஆம் நாளுக்குள் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இன்னும் நடுவர் மன்றம் அமைக்கப்படவில்லை. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தென்பெண்ணையாறு வழக்கு
தென்பெண்ணையாறு ஆற்றுநீர்ச் சிக்கலைத் தீர்ப்பதற்காக நடுவர் மன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அமைக்கவில்லையென பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் உருவாகும் தென்பெண்ணையாறு அம்மாநிலத்தில் 112 கி.மீ மட்டுமே பாய்கிறது. அதைவிட 50% அதிகமாக 180 கி.மீ தொலைவுக்கு தமிழ்நாட்டில் பாயும் தென்பெண்ணையாறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை வளப்படுத்தி விட்டு கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. தென்பெண்ணையாற்றின் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்குவதில் கர்நாடகம் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. இதைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,
காலக்கெடு முடிவு
தென்பெண்ணையாறு சிக்கலுக்கு தீர்வு காண 3 மாதங்களில் நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று திசம்பர் 14-ஆம் நாள் ஆணையிட்டது. அதன்படி நேற்றைக்குள் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதன் கடமையை இதுவரை நிறைவேற்றவில்லை. நடுவர் மன்றம் அமைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதற்கு முன்பாக கடந்த வாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு, நடுவர் மன்றம் குறித்து முடிவெடுக்கவில்லை. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைப்பு ஆகும். அந்த இலக்கணத்தின்படி மத்திய அரசு செயல்படுகிறது என்றால், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி நடுவர் மன்றத்தை அமைத்திருக்க வேண்டும்.
கர்நாடகாவிற்கு ஆதரவு
ஆனால், அவ்வாறு மத்திய அரசு செயல்படாததற்கு காரணம் அரசியல் தான். கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 24-ஆம் தேதிக்கு முன்பாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதற்கான தேர்தல் அட்டவணை எந்த நேரமும் வெளியிடப்படக்கூடும். இத்தகைய நேரத்தில் தென்பெண்ணையாறு நடுவர் மன்றத்தை அமைத்தால், அது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தான் நடுவர் மன்றம் அமைப்பதை மத்திய அரசு தாமதமாக்குகிறது. மத்தியில் எந்தக்கட்சி ஆட்சி நடந்தாலும், காவிரி ஆற்றுநீர் சிக்கலில் எவ்வாறு தமிழ்நாட்டிற்கு எதிராகவும், கர்நாடகத்திற்கு ஆதரவாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டனவோ, அதேபோல் தான் தென்பெண்ணையாற்று சிக்கலிலும் கர்நாடகத்திற்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
அவமதிப்பு வழக்கு
தென்பெண்ணையாற்றின் துணை ஆறுகளில் ஒன்றான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு சட்டத்தை மீறி அணை கட்ட மத்திய அரசு தான் உதவியது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் சிக்கலிலும் கர்நாடகத்திற்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நடுவர் மன்றம் அமைப்பது மட்டும் தான் பெண்ணையாறு சிக்கலுக்கு தீர்வு ஆகும். அதை உணர்ந்து தான் உச்சநீதிமன்றமும் அத்தகைய தீர்ப்பை அளித்தது. எனவே, தென்பெண்ணையாற்று சிக்கலுக்கு தீர்வு காண இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். அவ்வாறு அடுத்த சில நாட்களுக்கும் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசு தவறினால், மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடருவதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்