உங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம் ..! பத்திரிகையாளர்களுக்கு அட்வைஸ் செய்த அன்பில் மகேஷ்..!
உங்கள் பணி மிகவும் அவசியமானவை தான். அதே நேரத்தில் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். கிருமினாசினி, முகக்கவசம், கையுறைகள் ஆகியவை தயாராக இருக்கின்றன. அது தேவை எனில் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள். அல்லது வேறு எந்த உதவி என்றாலும் தாராளமாக என்னை அழையுங்கள்
இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை 738 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் 8 பேர் பலியாகி இருக்கின்றனர். 21 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்ப இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமை வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் பத்திரிக்கை துறையை சார்ந்தவர்களும் கொரோனா குறித்த தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு அளித்து துரிதமாக செயலாற்றி கொண்டிருக்கின்றனர். இதனிடையே டெல்லியில் பணியாற்றிக் கொண்டிருந்த தஞ்சையை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கும் நிலையில் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பாக பணியாற்ற வேண்டும் என்று பலரும் அறிவுரை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் திருவெறும்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிக்கையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படி நலம் விசாரித்து வருகிறார் . நேற்று காலை முதல் பல்வேறு பத்திரிக்கையாளர்களை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் "உங்கள் பணி மிகவும் அவசியமானவை தான். அதே நேரத்தில் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். கிருமினாசினி, முகக்கவசம், கையுறைகள் ஆகியவை தயாராக இருக்கின்றன. அது தேவை எனில் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள்." அல்லது வேறு எந்த உதவி என்றாலும் தாராளமாக என்னை அழையுங்கள் என்று கூறியிருக்கிறார்.
அண்மையில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு தலா 3,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதுபோல தொடர்ச்சியாக பத்திரிக்கை துறையினருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ துறையினர், தூய்மை பணியாளர்கள் போல இரவு, பகல் பாராமல் மக்களுக்காக உழைக்கும் தமிழக செய்தியாளர்கள் மத்தியில் இதுபோன்ற நலம் விசாரிப்புகள் ஊக்கத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.