திமுக இளைஞரணி கொங்கு மண்டல பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த கால தேர்தல்களில் அதிமுகவின் அபார வெற்றிக்கு பெரிதும் கை கொடுத்து வந்தது கொங்கு மண்டலம் தான். இங்கு மொத்தம் உள்ள 61 தொகுதிகளில் 47 இடங்களை கைப்பற்றி கொங்கு மண்டலம் எப்போதும் தம்முடைய கோட்டை என நிரூபித்திருக்கிறது அதிமுக. 

இந்த மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு கிடைத்த பெரும் தோல்வி தான் அதை ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் ஆகியவற்றில் மொத்தம் 61 தொகுதிகள் உள்ளன. அதிமுக தொடங்கப்பட்டதில் இருந்து நடைபெற்ற தேர்தல்களில் அந்தக் கட்சிக்கு அதிக அளவிலான வெற்றியைக் கொடுப்பதிலும், தமிழக அரசியலின் பல்வேறு திருப்புமுனைகளை உருவாக்கிய நிகழ்வுகளுக்கு மையப் புள்ளியாகவும் இருப்பது இந்த மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலம்தான். 

2001 சட்டசபை தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதேவேளை 2006-ல் அதிமுக தோல்வி அடைந்த நிலையிலும் கொங்கு மண்டலத்தில் இருந்து 16 பேர் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு கடந்த 2011 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி இந்த மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் 55 தொகுதிகளைப் பிடித்து அதிமுகவின் கோட்டையாகவே திகழ்ந்தது. 2016ல் நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 61 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைத் தவிர 60 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 47 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. 

தற்போதைய அதிமுக ஆட்சியிலும், தங்கமணி, வேலுமணி,  எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் என கொங்குமண்டலத்தை சேர்ந்தவர்களே கோலோச்சி வருகின்றனர். இதனால் கொங்குமண்டலத்தை திமுக வசப்படுத்த மு.க.ஸ்டாலின் காய் நகர்த்தி வந்தார். அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவராக இருந்து அமமுகவில் இருந்த செந்தில் பாலாஜியை யாரும் எதிர்பாராவிதமாக திமுகவுக்குத் தூக்கி வந்தார் ஸ்டாலின். 

தற்போது திமுக இளைஞரணி துணைத் செயலாளராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கொங்கு மண்டல பொறுப்பாளாராக அறிவித்துள்ளனர்.