உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், நடிகர் கமல் ஹாசன் குறித்து ஒருமையில் பேசியது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்குநாள் ஒவ்வொரு விதமான சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்க் கலாச்சாரத்தை அழிப்பதாகவும், நிகழ்ச்சியை தடை செய்து கமல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என இந்து அமைப்பு புகார் அளித்துள்ளது.

நிகழ்ச்சி குறித்து, நடிகர் கமல் ஹாசன் விளக்கமளிக்கும் வகையில், பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக கூறியிருந்தார். நடிகர் ரஜினி, இப்பொழுதுதான் சொல்கிறார். நான் ஒரு வருடத்துக்கு முன்பே கூறிவிட்டேன் என்றும் கமல் ஹாசன் தெரிவித்திருந்தார்.

நடிகர் கமலின் இந்த பேச்சு, மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் ஜெயக்குமார், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நடிகர் கமல் ஹாசனை விமர்சித்து பேட்டி அளித்திருந்தனர்.

இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகர் கமல் பேசியது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியால் ஆவேசமடைந்த அமைச்சர் அன்பழகன், கமல் ஒரு ஆளே கிடையாது. அவன் சொல்றதுக்கெல்லாம் நான் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை என்று ஆத்திரத்துடன் பதிலளித்தார்.

நடிகர் கமல் ஹாசன் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.