An Injured Man Asks Rajinikanth who Are You During His Hospital Visit In Tuticorin

`சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்னக் குழந்தையும் சொல்லும்... ' என்ற பாடல் ரஜினி நடித்த `ராஜா சின்ன ரோஜா' படத்தில் வரும். ஆனால், அந்த சூப்பர் ஸ்டாரை தூத்துக்குடியில் ஒருவர் ``யார் நீங்க?" எனக் கேட்ட ஒரு கேள்வி ரஜினிக்கே ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி போல...

தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது துத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சி பெற்று வருகின்றனர். இவர்களை பார்க்க அரசியல் கட்சி தலைவர்கள் பார்த்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று 144 தடை உத்தரவு நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வந்த பின்பு திடீரென ரஜினி வருகை தந்தார். அப்போது சிகிச்சையிலிருப்பவர்களை பார்த்துவந்த ரஜினியை பார்த்த இளைஞர் ஒருவர் எந்த பரபரப்பும் இல்லாமல் படுக்கையில் இருந்து எழுந்து வந்து, ஆமா நீங்க யாருங்க? என ரஜினியிடம் கேட்கிறார். அதற்கு ரஜினி சிரித்துக் கொண்டே “நான்தான்பாரஜினிகாந்த்” சொல்கிறார்.அப்போது 100 நாள் போராடிய போது வராத நீங்க இப்ப ஏன் வந்தீங்க.. இவரு ரஜினிகாந்துன்னு எங்களுக்கு தெரியாதா? எங்கேயிருந்து வருகிறீர்கள்?" என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், ``நான் சென்னையிலிருந்து வருகிறேன்" என்று சொன்னதும், ``சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா? என அந்த இளைஞர் கேட்க, ரஜினியோ சிரித்த முகத்தோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.

ரஜினியை பார்த்து யார் நீங்க எனக் கேட்ட அந்த இளைஞர், யார் என்று தெரியவந்துள்ளது.

அந்த இளைஞர் குறித்து விசாரித்ததில், அவருடைய பெயர் சந்தோஷ் என்பதும், `அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்' என்பதும் தெரியவந்தது. போலீஸாரின் தாக்குதலில் பலத்தக் காயமடைந்து தலையில் பத்துத் தையல்கள் போடப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரஜினியை யார் என்றுக் கேட்ட சந்தோஷ் முன்னணி இணையதளத்திற்கு அளித்துள்ளார். அதில்; ``தூத்துக்குடியில் நாங்கள் நூறு நாள்களாகப் போராடினோம். அப்போதெல்லாம் நடிகர் ரஜினிகாந்த் எங்களைச் சந்திக்கவோ, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ வரவில்லை. போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். பலர் மரணத் தருவாயில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் நடந்து இன்றோடு எட்டு நாள்கள் ஆகின்றன.

இந்தச் சம்பவம் நடந்து இவ்வளவு நாள்களாக ஆகியும் வாய்திறக்காத ரஜினிகாந்த். பாதிப்புக்குள்ளானவர்களை வந்து சந்திக்கவும் இல்லை. இப்போது எதற்காக வருகிறார்? அதுவும் ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகு? ஸ்டெர்லைட் ஆலையை மூடவில்லை என்றால் வந்திருப்பாரா? தொடர்ந்துபேசிய அவர் தற்போது அவர் வந்ததற்கு பின்னணியில் மிகப்பெரிய காரணம் இருக்கிறது எனக் கூறினார்.

இன்னும், சில தினங்களில் `காலா' படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இனியும் மக்களைப் போய்ச் சந்திக்கவில்லை என்றால் அவருடைய படம் தமிழகத்தில் ஓடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் அவர் வந்து எங்களைச் சந்தித்து நிதி உதவி வழங்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதனால்தான் எனக்குக் கோபம் வந்து, அவரை அப்படிக் கேட்டேன். எங்களால் எப்படிப் போராடி வெற்றிபெறத் தெரிந்ததோ. அதுபோல எங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் எங்களுக்குத் தெரியும்" என கண்ணீரோடு சொல்லியிருக்கிறார் சந்தோஷ்.

``சில சமூக விரோதிகளால்தாம் கலவரம் ஏற்பட்டது" என ரஜினி பேட்டியை பற்றி கேட்டதற்கு பதிலளித்த சந்தோஷ், "நாங்கள் சமூக விரோதி என்பதை இவர் பார்த்தாரா? இல்ல போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துகொண்டார்கள் என்பதை ரஜினி தனது ஏழாவது அறிவை வைத்து உணர்ந்தாரா? எங்களைப் பற்றிப் பேச ரஜினிக்கு எந்தத் தகுதியும் கிடையாது" என ஆவேசமாக பதிலளித்துள்ளார்.