லடாக்கில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டி ராணுவ வீரரின் குடும்பத்திற்கு கனிமொழி எம்பி ஆறுதல் கூறி, இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம். கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் கருப்பசாமி(34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். நாயக் பதவி வகித்து வந்துள்ளார். காஷ்மீர் லடாக் பகுதியில் பணியாற்றி வந்த கருப்பசாமி  விபத்தில் வீரமரணமடைந்துள்ளார். இதுகுறித்த தகவல் ராணுவத்தில் இருந்து கருப்பசாமியின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த கருப்பசாமிக்கு மனைவி தமயந்தி என்ற மனைவியும், கன்யா(7), வைஷ்ணவி(5) ஆகிய மகள்களும், பிரதீப்ராஜ் (1) என்ற மகனும் உள்ளனர். இவர் 2 மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கருப்பசாமி கடந்த பிப்ரவரி மாதம் தான் மீண்டும் பணிக்கு திரும்பியிருக்கிறார். இதனால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மறைந்த ராணுவ வீரர் கருப்பசாமிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிராமத்தில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

இந்நிலையில் திமுக மகளிரணி மாநில செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, ‌ கீதா ஜீவன் எம்எல்ஏ ஆகியோர் கருப்பசாமி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். மேலும் இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.வீரமரணம் அடைந்த இராணுவவீரர் கருப்பசாமி குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்றுக்கொள்வதாக கனிமொழி உறுதியளித்துள்ளார்.