தமிழக காங்கிரஸ் கட்சியை கண்காணித்து நிர்வகிப்பதும், அமில மழையில் குளிப்பதும் ஒன்றுதான்! என்பார்கள். காரணம், மாவட்டத்துக்கு ஒரு பெரிய தலை இருந்து கொண்டு, மாநில அளவிலும் கோலோச்சிக் கொண்டு ஆளுக்கொரு திசைக்கு இழுப்பதும், தலைமையை மண்டை காய வைப்பதுமாய் படுத்தி எடுப்பார்கள்! என்பது பொது விமர்சனம். அதனால்தான் ‘அமில மழையில் நனைவது போல’ என்பார்கள். 

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக முகுல் வாஸ்னிக்தான் மேலிட பொறுப்பாளர், பார்வையாளர் எனும் முறையில் தமிழகத்துக்கு வந்து தமிழக காங்கிரஸின் சிட்டிங் மற்றும் மாஜி தலைவர்களை அரவணைத்தும், கண்டித்தும், வழி நடத்தியும் சென்று கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வந்து இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு கிளம்புவதற்குள் வாஸ்னிக்கிற்கு தாவு தீர்ந்துவிடுமாம். இதை அவரே டெல்லியில் உள்ள மற்ற மாநில பொறுப்பாளர்களிடம் சொல்லி நோவது வழக்கம். 

ஆனாலும் என்ன செய்ய தலைமை இவரையே அதிகமாக தொடர்ந்து அனுப்புவதால் சென்னைக்கு அவர் வருவதும், வாஸ்னிக்கை தமிழக தலைவர்கள் வெச்சு செய்வதும் வாடிக்கையான வேடிக்கையாகி இருக்கிறது. இந்த சூழலில் ப.சிதம்பரம் கைது விவகாரம், உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை ஆகியன தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு ஆலோசனை கூட்டத்துக்காக சமீபத்தில் வந்திருந்தார் வாஸ்னிக். வழக்கம்போல வரை கதறவிட்டுட்டனர் தலைவர்கள். குறிப்பாக திருச்சி லோக்சபா எம்.பி.யும்,  தமிழக காங்கிரஸின் மாஜி தலைவருமான திருநாவுக்கரசர் நிகழ்வில் பேச துவங்கியதும், வாஸ்னிக் எழுந்து ’நான் ரெஸ்ட் ரூப் போயிட்டு வர்றேன்’ என்றிருக்கிறார். அரசரின் முகம் அஷ்டகோணலாகிவிட்டது. அதிருப்தியை முகபாவத்தில் வெளிப்படுத்தியவாறே ’சரி நீங்க போங்க, நான் பேசிக்கிறேன்’ என்ற ரீதியில் அவர் சொல்ல, வாஸ்னிக்கோ நொந்து போய் மீண்டும் நாற்காலியில் அமர்ந்து அரசரின் பேச்சை கேட்க துவங்கிவிட்டார்.  

பாவம் அவரும், அடுத்து வந்த முக்கிய தலைகளும் பேசி முடிக்கும் வரை முகுலோ ‘அடக்கிக் கொண்டு’ அமைதிகாத்து அமர்ந்துவிட்டார். 
இந்த ஆலோசனை கூடத்தில் பங்கேற்கும் படி குஷ்புவுக்கு பல முறை அழைப்பு விடுக்கப்பட்டதாம். ஆனாலும் அவர் வரவேயில்லை. வழக்கம்போல் நிகழ்ச்சி துவங்கி, பாதி போயிட்டிருக்கையில் எண்ட்ரி கொடுத்து எல்லோரையும் தன் பக்கம் ஈர்ப்பார்! என்று நினைத்தால் அதுவும் நடக்கவில்லை. குஷ்புவின் இந்த ஆப்சென்ட்டினால் அநியாயத்துக்கு அப்செட்டாகிவிட்டாராம் முகுல் வாஸ்னிக். 

கடந்த முறை ராஜீவ்காந்திக்கு புகழாரம் சூட்ட வேண்டிய விழாவில் அவருக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசாக கொடுத்திருந்தார் முகுல். அந்த குட்டி எப்படி இருக்குது? வளர்ந்துடுச்சா? நல்லா பால் குடிக்குதா? சாப்பிடுதா? என்றெல்லாம் குஷ்புவிடம் கேட்கும் ஆர்வத்தில் இருந்தாராம்! ஆனால் ஒன்றும் முடியாம போச்சாம். 
அச்சச்சோ! முகுல் பாவம்ல!