தமிழக எதிர்க்கட்சியான தி.மு.க., ஆளும் அ.தி.மு.க. அரசாங்கத்தை ‘பா.ஜ.க.வின் பினாமி அரசு! மத்தியரசிடம் அடிமையாக கிடக்கிறார்கள்! டெல்லி ஒரு கோடு கிழித்தால் அதை தாண்டிட தைரியமற்றவர்கள்!’ என்றெல்லாம் ஏக கிழி கிழித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், தமிழக அமைச்சர் ஒருவர் பா.ஜ.க.வின் அடிப்படையான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை தன் தொகுதியில் முடக்கிட முயல்கிறார்! என்று ஒரு பொளேர் புகார் பொங்கியிருப்பதுதான் அதிர்ச்சியே. 
விவகாரம் இதுதான்.


தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் விஜயபாஸ்கர். இவரது சொந்த மாவட்டம் புதுக்கோட்டை. இங்கு இந்த ஆண்டு விஜயதசமி அன்று ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொண்டு  சிறப்பிக்க இருந்த அணிவகுப்பை, அமைச்சர் தடுத்து நிறுத்திவிட்டார் தன் அதிகாரத்தினால்! என்று ஆர்.எஸ்.எஸ். ஆத்திரப்படுகிறது. 
புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான பார்த்திபன் “இந்த ஆண்டு இலுப்பூரில் சுமார் ஐந்தாயிரம் பேர் கலந்து கொள்ளும் ஊர்வலத்தை நடத்த திட்டமிட்டோம். மாவட்ட எஸ்.பி. செல்வராஜிடம் ஒரு மாசத்துக்கு முன்பே அனுமதி கேட்டோம், அவரும் ‘தாராளமா பண்ணுங்க.’ என்றார்.

தலைக்கு எண்ணூறு ரூபாய் செலவு செய்து, யூனிஃபார்ம் வாங்கி ஐந்தாயிரம் பேரும் தயாராகிவிட்டோம். அதன் பின் அனுமதி கடிதத்தை போலீஸிடம் கொடுக்கப்போனால், ‘அந்த இடத்தில் ஊர்வலம் நடத்த மாற்று மதத்தினர் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். எனவே நான் அனுமதி தரமுடியாது. நீங்க கோர்ட்டுக்கு போய் அனுமதி வாங்கிக்குங்க.’ அப்படின்னு சொல்லிட்டார். இந்த திடீர் மறுப்புக்கு பின்னணி, அமைச்சர் விஜயபாஸ்கர் தான். அவரோட தலையீடால்தான் போலீஸ் அனுமதி மறுத்துடுச்சு.” என்றார். 

மநாதபுரம் கோட்ட பா.ஜ.க.வின் இளைஞரணிப் பொறுப்பாளரான பாண்டியராஜனோ “விஜயபாஸ்கரின் சொந்த தொகுதியில் இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டிருந்தோம். எங்கே நாங்கள் வெற்றிகரமாக ஊர்வலம் நடத்தி, மக்களிடம் எங்கள் மாஸை காண்பிச்சுட்டால்,  தேர்தலில் இந்த தொகுதியை நாங்க கேட்டுடுவோம்னு அமைச்சருக்கு பயம். அதனாலதான் தடுத்துட்டார். போனதடவை உள்ளாட்சி தேர்தலின்போது புதுக்கோட்டை நகர் மன்ற தலைவருக்கான பதவிக்கு எங்கள் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வந்தப்ப, அடியாட்களை வரிசையில நிற்க வெச்சு, தடுத்தார். இதே மாதிரி எங்கள் கட்சிக்கு நிறைய இடைஞ்சல்களை கொடுக்கிறார்.

அன்னைக்கு அடியாட்களை வெச்சு தடுத்தவர், இன்னைக்கு போலீஸை வெச்சு இம்சை கொடுத்திருக்கார். எங்களைப் பார்த்தாலே அமைச்சருக்கு பயமா இருக்குது.” என்கிறார்..ஆனால் அமைச்சரின் தரப்போ “இப்படியொரு ஊர்வலம் நடக்குறதெல்லாம் அமைச்சருக்கு தெரியவே செய்யாது. அவர் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்ல பிஸியா இருக்கார். இப்படியெல்லாம் தடுத்து, நிறுத்தி வைக்குமளவுக்கெல்லாம் எதுவுமில்லை, அப்படி மோசமான அரசியல் செய்யும் நபரும் விஜயபாஸ்கரில்லை.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை சொல்ல விரும்புகிறோம். குட்கா விவகாரம்! எனும் பொய் வழக்கில் எங்கள் அமைச்சர் விஜயபாஸ்கரை அசிங்கப்படுத்துகிறார்கள். அந்த விவகாரம் தொடர்பான ரெய்டின் மூலம் எங்கள் அமைச்சர், பா.ஜ.க.விடம் பெட்டிபாம்பாக அடங்கிவிட்டார்! என்று விமர்சித்தார்கள். அதே கோஷ்டிதான் இன்று இப்படி மாற்றி பேசுகிறது. 
இப்ப புரியுதா எங்கள் அமைச்சர் எந்த தீமைக்கும் போகாதவர் என்பது?” என்கிறார்கள். 
சர்தான்!