தமிழகத்தில் குடிநீர் திட்டப்பணிகளுக்கு கூடுதலாக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

குடிநீர் பிரச்னையை சமாளிப்பது குறித்து அதிகாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்நிலையில்  தமிழகம் முழுவதும் சீராக குடிநீர் வழங்க 710 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது.  ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர ரூ 65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிகள், பேரூராட்சிக்ள், ஊரகப் பகுதி குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு ’’குடிநீர் ஆதாரமாக விளங்கும்  நான்கு ஏரிகளும் வறண்ட நிலையில் மக்களுக்கு தண்ணீர் கொடுக்கிறோம். இதற்கு ஊடகங்கள் ஆதரவு வழங்க வேண்டும். தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை கேரளா தந்தால் நன்றாக இருக்கும். இது குறித்து கேரள முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளேன்.

முடிந்த அளவுக்கு துரித நடவடிக்கை எடுத்து உரிய நீர் வழங்கப்படுகிறது. அதிகாரிகள் நியமனம் செய்து குடிநீர் பிரச்னையை கண்காணிக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. 12 டிஎம்சி நீர் கிருஷ்ணா நதியில் இருந்து வர வேண்டும் ஆனால் 2 டிஎம்சி மட்டுமே கிடைத்தது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், நிலத்தடி நீர், குவாரிகளில் எடுக்கும் நீர் ஆகியவற்றை சேகரித்து தண்ணீர் வழங்கி வருகிறோம்’’ என அவர் தெரிவித்தார்.