*கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்காக மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட நாற்பத்து ஒன்பது பேர் மீது தேசதுரோக வழக்கு போடப்பட்டு இருந்தால், அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிரும் உரிமையை அனைவருக்கும் தரவேண்டும்.- விஜயகாந்த் (தே.மு.தி.க. தலைவர்)

*தினகரன் ஒரு பசுத்தோல் போர்த்திய நரி. அவரைப் போல் வஞ்சக நெஞ்சம் கொண்ட மனிதரை அரசியலில் பார்த்ததில்லை. தண்டனை காலம் முடியும் முன்பே சசிகலா விடுதலையாவார். அப்போது தினகரன் யார் என்பது தெரியவரும்! இன்னும் கொஞ்ச நாளில் அ.ம.மு.க. எனும் கட்சியே இருக்காது.- பெங்களூர் புகழேந்தி 

*தெலுங்கானா உள்ளிட்ட மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு மிகவும் குறைவு. இதுவரை டெங்கு பாதிப்பால் யாரும் தமிழகத்தில் உயிரிழக்கவில்லை.- விஜயபாஸ்கர் (சுகாதாரத்துறை அமைச்சர்)

*உள்ளாட்சி அமைப்புகளிடம் இர்நுது பறிக்கப்பட்ட ஆரம்பக்கல்வி, சுகாதாரம், வேளாண்மை, கால்நடை மேம்பாடு உள்ளிட்டவை மீண்டும் அவற்றிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அரசியல் குறுக்கீடு இல்லாமல் இவற்றின் பணி நடக்க வேண்டும்.- நல்லசாமி (கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்)

*மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்தால் தேச துரோக வழக்கு பாய்கிறது. கூட்டணியில் இருப்பதால் அ.தி.மு.க. அரசும் எதையும் எதிர்த்து கேட்பதில்லை. மக்களின் உரிமை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த அ.தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் இடைத்தேர்தலின் ரிசல்ட் இருக்க வேண்டும். - ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்)

*எதிர்பாராத விபத்தினால் தமிழக முதல்வர் ஆகிவிட்ட இ.பி.எஸ். ஆட்சியால் நமக்கு விபத்தா இல்லை அவருக்கு விபத்தா? அவர் ஆட்சியிலிருந்து வீட்டிற்கு போக அச்சாரமாக வரும் இடைத்தேர்தல் அமைந்து உள்ளது. அடுத்த பொது தேர்தலின் மூலம் தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க இந்த இடைத்தேர்தலை முன்னோட்டமாக வைக்க வேண்டும்.- கனிமொழி (லோக்சபா உறுப்பினர்)

*மின் இணைப்புக்கான கட்டணங்களை முந்நூறு சதவீதம் வரை உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. மின் கட்டணத்தையும் உயர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே பால், பஸ் போன்றவற்றின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுவிட்ட நிலையில் மக்களுக்கு இந்த கட்டண உயர்வும் பெரும் சுமையாகிவிடும். 
ஆட்சியாளர்கள் தங்களின் நிர்வாக திறமையின்மையை மக்களின் தலையில் இறக்குகின்றனர். -தினகரன் (அ.ம.மு.க. பொதுச்செயலாளர்)

*காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசை மத்திய அரசு அனுமதிக்க கூடாது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட வராமல் போய்விடும். தமிழகத்தின் உயிர் ஆதாரமான காவிரி தடுக்கப்பட்டு விடும். - வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்)