ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் குண்டம் இறங்கிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில். ஆண்டு தோறும் பங்குனி மாத குண்டம் திருவிழா என்பது மிகவும் புகழ்பெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா , கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கமாகும் .கொரோனோவின் தாக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது. . குறிப்பாக கடந்த மார்ச் மாதம் 7 தேதி புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலின் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பண்ணாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சபரத்தில் வைக்கப்பட்டு சத்தியமங்கலத்தை சுற்றி உள்ள பகுதிகளில் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் திருவிழாவானது இன்று காலை தொடங்கி நடைபெற்றது. அதிகாலை 4 மணி அளவில் கோவில் பூசாரி முதலில் குண்டத்திற்கு பூஜைகள் செய்த பிறகு குண்டத்தில் இறங்கினார்.பின்னர் கடந்த இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர்.இதற்காக தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதற்காக 1500 க்கும் மேற்பட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் தனது சுறுசுறுப்பால் அனைவரது கவனத்தை ஈர்த்த அதிகாரியான ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளரான அமுதா ஐஏஎஸ் இந்த பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் கலந்து கொண்டார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட காரணத்தால் பல்வேறு கோயில் திருவிழாவில் கலந்து கொள்வார் அந்த வகையில் பண்ணாரி அம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டவர், திடீரென குண்டத்தில் இறங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
