அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட அமமுக படு தோல்வியை சந்தித்தது.

இதையடுத்து அந்த கட்சியில் இருந்த முன்னணி நிர்வாகிகள் பலர் வெளியேறி மாற்று காட்சிகளில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்திருக்கும் தினகரன் தற்போது கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்து வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அவர் காட்சி சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. இந்த நிலையில் காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 21 ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு 24 ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தினகரன் தெரிவித்துள்ளார். அமமுகவிற்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரையில் இடைத்தேர்தல்களில் போட்டியிட போவதில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.