எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு பலமான கூட்டணியை அமைத்துள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அந்தக்  கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 நாடாளுமன்றத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அதிமுக சற்று தெம்பாக உள்ளது. தங்களது கூட்டணி பலமானது என அக்கட்சி நம்புகிறது. மேலும் மாநில அரசு சார்பில் பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், வறட்சிக்காக 2000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதே போல் மத்திய அரசு சார்பிலும் பொது மக்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

அது போக நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் உங்களுக்குத்தான் என உறுதி அளித்துள்ளது. இப்படி எல்லா வழிகளும் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் நம்புகின்றனர்.

இந்நிலையில் தான் அதிமுகவுக்கு 20 முதல் 22 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தமிழக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இது அதிமுகவுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதால் அக்கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ளதாகவும் உளவுத் துறையில் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் தென் மாவட்டங்களில் அமமுக வலுவாக இருப்பதாகவும், அந்த ஏரியாவில் 5 முதல் 6 தொகுதியில் அக்கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை கொடுத்துள்ள ரிப்போர்ட்டால் எடப்பாடி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த ரிப்போர்ட் குறித்து அறிந்து டி.டி.வி. தரப்பு செம குஷியில் உள்ளது. தங்களது பக்கத்தை இன்னும் ஸ்ட்ராங் பண்ணுவதற்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இறங்கியுள்ளது.