டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவை பதிவு செய்த மாநில கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுகவை பதிவு செய்யப்பட்ட மாநிலக் கட்சியாக அங்கீகரிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. இதுதொடர்பான கோரிக்கை நிலுவையில் இருந்தது. விரைந்து அங்கீகரிக்கக்கோரி டிடிவி தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டுவந்தது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிய நிலையில், அமமுகவை பதிவு செய்துள்ளது தேர்தல் ஆணையம். இதன்மூலம் அமமுக பதிவு செய்யப்பட்ட மாநிலக் கட்சியாகி உள்ளது.


இதுதொடர்பாக டி.டி.வி.தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், “அமமுகவைப் பதிவு செய்யப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அமமுகவை அங்கீகரிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான விண்ணங்கள் வந்தன. ஆனால், நாங்கள் அமமுக சார்பில் உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டது. இதை ஏற்று தேர்தல் ஆணையம் அமமுகவை அங்கீகரித்துள்ளது. அமமுகவின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.