தேர்தல் ஆணையத்தில், தனிக் கட்சியாக, அமமுகவை பதிவு செய்துள்ளதால், அக்கட்சியில், அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும், திமுகவில் ஐக்கியமாக முடிவு செய்துள்ளனர். 

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கடந்த 19ஆம் தேதி சென்னை அசோக் நகரிலுள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அக்கட்சியைப் பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது. துணைப் பொதுச் செயலாளராக இருந்த டிடிவி தினகரன், பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.  அதிமுகவை கைப்பற்ற, சட்ட போராட்டம் தொடரும் என்றும், அதுவரை, அமமுக, என்ற கட்சியை துவக்குவதாகவும், ஆதரவாளர்களிடம் தினகரன் தெரிவித்தார்.

இதனால், சசி குடும்பத்தினரால், அதிமுகவில், கட்சி மற்றும் ஆட்சி பதவிகளை பெற்றவர்கள், தினகரன் அணியில் இருந்தனர். விரைவில், அதிமுக - அமமுக இணைந்து விடும் என்ற, நம்பிக்கையில் இருந்தனர். கட்சி நிர்வாகிகளை, தொடர்ந்து செலவு செய்ய வலியுறுத்தியது, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி வந்தது உள்ளிட்ட காரணங்களால், அமமுகவில் இருந்த பலரும், தினகரன் மேல் அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து, உச்சகட்ட அதிருப்தியில் இருந்த, முக்கிய நிர்வாகிகளான, முன்னாள், எம்.எல்.ஏக்கள் செந்தில்பாலாஜி, கலைராஜன் ஆகியோர், திமுகவில் இணைந்தனர். இந்த சூழலில், லோக்சபா தேர்தல் முடிந்த உடனே, தினகரன், அமமுகவின் பொதுச்செயலராக பொறுப்பேற்றார். மேலும், கட்சியை, தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார். அதேபோல தேர்தல் பிரசாரத்தின் போது, பேனர், போஸ்டர்களில், ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை விட, தனக்கு முக்கியத்துவம் அளிக்க, கட்சியினரை வற்புறுத்தினார். இதனால், அக்கட்சியின் மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள் பலரும், தினகரன் மீது, கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள், திமுகவில் இணைய முடிவு செய்து உள்ளதாக சொல்கிறார்கள் அமமுகவினர்.

பொதுச் செயலாளராகப் பதவி ஏற்ற பின் சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேசிய தினகரன் , அமமுகவின் சமீபத்திய நிகழ்ச்சிகள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கை சசிகலா தொடர்ந்து நடத்துவார். அமமுகவில் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகள் தேர்தல் மூலமாகத் தேர்வு செய்யக் கூடிய பதவிகள். பொதுச் செயலாளர், துணைத் தலைவர் பதவியைகளைத்தான் தற்போது பூர்த்தி செய்துள்ளோம். சசிகலாவுக்காக தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம். சிறையிலிருந்து வெளிவந்த பிறகு என்ன செய்வது என்பதை சசிகலா முடிவெடுப்பார் என்றார். என்னதான் தினகரன் அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கை சசிகலா தொடர்ந்து நடத்துவார் என சொன்னாலும் மாமுகவினர் அமமுகவினர் சாமாதானம் அடைவதாகவே தெரியவில்லை.