எதற்காக திமுகவினர் உள்ளாட்சி அமைப்புகளில் ஜெயித்துவிடக்கூடாது என்று பயந்தோமோ, எது நடக்கக்கூடாது என நினைத்தோமோ அது நடக்கத் தொடங்கியிருக்கிறது. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, வீடு கட்டும் அப்பாவி மக்களிடம் அடித்து பணம் பிடுங்கும் வேலையை தி.மு.க கவுன்சிலர்கள் தொடங்கியுள்ளார்கள் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார். 

சென்னை 34வது வார்டு திமுக கவுன்சிலர் ஷர்மிளா காந்தி மற்றும் அவரது கணவர் கருணாநிதி கட்ட பஞ்சாயத்து செய்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கவுன்சிலர் நாற்காலியில் ஷர்மிளா காந்தியின் கணவர் கருணாநிதி அமர்ந்திருக்கிறார். ஷர்மிளா அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருக்க, அங்கிருக்கும் மேலும் சிலர் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். 

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த தேவி என்ற பெண் வீடுகட்டி வருவதாகவும் அதற்காக அவரிடம் 34வது வார்டு திமுக கவுன்சிலர் ஷர்மிளா காந்தி அவரது கணவர் அதிமுக வட்டச்செயலாளர் கருணா ஆகியோர் 10 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டுவதும் அதில் இடம்பெற்றுள்ளது.இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் இந்த வீடியோ குறித்து பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.கவுன்சிலரின் கணவர் கருணா என்ற கருணாநிதி மாநகராட்சி ஒப்பந்ததாரராகவும் சென்னை வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக உள்ளதாகவும், இவர் அடியாட்களுடன் பொதுமக்களை மிரட்டி வீடு கட்டுபவர்களிடம் மாமுல் வசூலித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ அதிக அளவில் விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுக கவுன்சிலர் ஷர்மிளா காந்தி மற்றும் அவரது கணவர் கருணாநிதி ஆகியோர் மீது கட்சி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில் எதற்காக திமுகவினர் உள்ளாட்சி அமைப்புகளில் ஜெயித்துவிடக்கூடாது என்று பயந்தோமோ, எது நடக்கக்கூடாது என நினைத்தோமோ அது நடக்கத் தொடங்கியிருக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " எதற்காக தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என கவலைப்பட்டோமோ, எதற்காக தி.மு.க.வினர் உள்ளாட்சி அமைப்புகளில் ஜெயித்துவிடக்கூடாது என்று பயந்தோமோ, எது நடக்கக்கூடாது என நினைத்தோமோ அது நடக்கத் தொடங்கியிருக்கிறது" என கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், " வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, வீடு கட்டும் அப்பாவி மக்களிடம் அடித்து பணம் பிடுங்கும் வேலையை தி.மு.க கவுன்சிலர்கள் தொடங்கியுள்ளார்கள். சென்னை மாநகராட்சியின் தி.மு.க. கவுன்சிலர் ஷர்மிளா மற்றும் அவரது கணவர் கருணா மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் இந்தக் காணொளியே இதற்குச் சாட்சி" எனவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.