கோவில்பட்டி தொகுதியில் பிரச்சாரத்தில் இருந்து வந்த டி.டி.வி.தினகரன் சென்னை திரும்பியதும் விஜயகாந்தை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் அமமுகவுடன் தேமுதிக தேர்தல் கூட்டணி வைத்துள்ளது. அமமுக தரப்பில் இருந்து தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் இந்த தொகுதி உடன்பாடு செய்து கொள்ள தினகரனோ – பிரேமலதாவோ முன்வரவில்லை. தேமுதிக மற்றும் அமமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்ற நிகழ்ச்சியில் தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டது. ஒரு கூட்டணி உருவானால் அந்த இரண்டு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து அதனை அறிவிப்பது தான் வழக்கம். ஆனால் அமமுக – தேமுதிக கூட்டணியை அப்படி அறிவிக்கவில்லை.

கோவில்பட்டி தொகுதியில் பிரச்சாரத்தில் இருந்து வந்த டி.டி.வி.தினகரன் சென்னை திரும்பியதும் விஜயகாந்தை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன் படி இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்து விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அவருடன் கட்சியின் துணை செயலாளர் எல்.கே சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் உடனிருந்தார்.

அமமுக - தேமுதிக கூட்டணி உறுதியான பிறகு முதன் முறையாக விஜயகாந்தை அவருடைய கட்சி அலுவலகத்தில் டி.டி.வி.தினகரன் சந்தித்தார். இருவரும் தேர்தல் நிலவரம் குறித்தும், அடுத்தகட்ட பிரசாரம் குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
