அதிகார மையத்தின் ஏவலை ஏற்று, மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்க நோட்டீஸ் வழங்கி, பெரும் விமர்சனத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால். இதுவரைக்குமான சபாநாயகர்களில் மிகக் கடுமையான விமர்சனத்தை சந்தித்திருக்கும் தனபாலின் அரசியல் வரலாற்றில் இப்போது கடும் சோதனையான காலம்தான். 

ஆட்சி இருக்கும் வரை பதவி இருக்கும், அந்தஸ்து இருக்கும். ஆனால் அது மட்டுமா அரசியல் தலைவருக்கு அழகு? இந்நிலையில், இந்த விவகாரத்தில் சபாநாயகரைப் பார்த்து சில கேள்விகளை வைக்கும் அ.ம.மு.க.வின் கர்நாடக மாநில செயலாளரான புகழேந்தி “3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறீர்களே, இதே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்த கருணாஸ், அறிவாலயத்துக்கே சென்று ‘மாதிரி சட்டமன்றம்’ நிகழ்வில் கலந்து கொண்டு நடித்து அங்கே உங்கள் மன்றத்தின் செயல்பாடுகளை கிழித்தெறிந்தாரே! அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 

கூட்டணி எம்.எல்.ஏ.வான தமீமுன் அன்சாரி, தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி உங்கள் தர்மத்தை மீறி தி.மு.க. மேடைகளில் நின்று ஆவேசப்பட்டாரே. அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தினகரனை சென்று பன்னீர்செல்வம் ரகசியமாய் சந்தித்தாரே, உண்மை வெளியானது ஒப்புக் கொண்டாரே! அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வளவும் நடக்கும் போதெல்லாம் மெளனியாய் இருந்துவிட்டு, இப்போது பெரும்பான்மை பலத்தை குறைத்துக் காட்டும் முயற்சியாய் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி நீக்க தண்டனையை கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களே, இதுதான் சட்டமன்ற ஜனநாயகமா? அப்படின்னா ரத்தினசபாபதியை பார்த்து பயப்படுகிறீர்கள் நீங்கள். 

உங்கள் பார்வையில் பன்னீர் ஒரு டம்மி! அப்படித்தானே? நியாயம் தவறி செயல்பட்டு, சட்டமன்ற ஜனநாயகத்தை குலைத்துவிட்டீர்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு, தலையில் குட்டும் தீர்ப்பை வழங்கியுள்ளது. தயவு செய்து உடனடியாக பதவி விலகி, ஜனநாயக மாண்பைக் காப்பாற்றுங்கள்.” என்று பொளேரென பேசியுள்ளார். இதற்கு சபாநாயகரின் பதில் என்னவோ?!