நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்ததுடன் மட்டுமல்லாமல் டெபாசிட் கூட வாங்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வந்த தங்க தமிழ்செல்வனின் தீவிர ஆதரவாளரான கூடலூர் முன்னாள் சேர்மன் அருண்குமார் அதிமுகவில் இணைந்துள்ளார். 

அமமுகவை பலம் வாய்ந்த கட்சியாகவும், டி.டி.வி.தினகரன் சக்தி வாய்ந்த தலைவராக உருவெடுப்பார் என எதிர்பார்த்திருந்த அக்கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் இருந்து வந்தனர். இந்நிலையில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்து வந்தனர். 

இந்நிலையில் டி.டி.வி. ஆதரவாளரான தங்க தமிழ்செல்வனின் தீவிர ஆதரவாளரான கூடலூர் முன்னாள் சேர்மன் அருண்குமார் திடீரென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி அதிமுகவில் துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். இந்த அருண்குமார் முதலில் தேமுதிகவில் மாவட்ட செயலாளராக இருந்தார். அதன் பின் தங்கதமிழ்செல்வன் தான் அதிமுகவில் சேர்ந்து சீட் வாங்கி கொடுத்ததின் மூலம் கூடலூர் நகர மன்ற தலைவராக இருந்தார். 

அதோடு தங்கதமிழ்செல்வனின் தீவிர ஆதரவாளராக இருந்த அருண்குமார் திடீரென அதிமுகவுக்கு தாவியதை கண்டு மாவட்டத்தில் உள்ள டி.டி.வி. ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே  அமமுக கழக அமைப்புச் செயலாளரும், தென் மண்டல பொறுப்பாளருமான திருநெல்வேலி மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.ஆதித்தன் அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்படத்தக்கது.