விநாயகர் சதுர்த்தி, புதுப்பட ரிலீஸ், கம்பெனி ஓப்பனிங் என்று எதுவும் வந்துட கூடாது. பயலுவ பொங்கி எழுந்துருவாய்ங்க. பனைமர உசரத்துக்கு ஆல மர அகலத்துக்கு ஆன, பூன, குதிர, தேரு, தென்னமரம்ன்னு கையில கிடைக்கிற வஸ்துக்களையெல்லாம் எடுத்துப்போட்டு கிராஃபிக்ஸ் டிஸைனர் கிண்டி கொடுக்கிற படுபயங்கர பிளக்ஸ் பாதாம் கீரை ரோட்டில் கட்டிவிட்டு ஒரு லுக் விடுவாய்ங்க பாருங்க...தெப்பக்குளத்துல இருந்து அழகர் கோவில் வரைக்கும் அல்லு தெறிக்கும். 

இந்த பிளக்ஸ் மேனியா மதுரக்காரய்ங்கட்ட இருந்து அப்டியே தீயா பரவி புதுச்சேரி வரைக்கும் போட்டு எறியுது. 
நம்மூர்லயாச்சும் பயபுள்ளைக அதுங்க படத்தை போட்டுத்தான் அலப்பரைய கூட்டுவாய்ங்க. ஆனா பாண்டிச்சேரியில முதல்வர்கள் படத்தப்போட்டு முழி பிதுங்க வெக்கிறாய்ங்க.

காங்கிரஸ் கோஷ்டி நாராயணசாமியின் படத்தை போட்டு ஒரு டெரர் பிளக்ஸை வைத்தால் , அடுத்த ரெண்டு மணி நேரத்தில் ரங்கசாமியின் கோஷ்டி ரகளையாக இன்னொரு பிளக்ஸை கட்டுகிறது. 

இந்த ரெண்டு டீமும் ரவுண்டு கட்டி பண்ணும் ரவுசில் தாறுமாறாக தலைசுற்றி தவிப்பது அப்பாவி பொதுஜனம்தான். பாண்டிச்சேரி மக்கள் மண்ணுமே ரத்தவாந்தி எடுத்து வந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் தலை தூக்கியிருக்கிறது. 

ஆமாம், திருச்சியில் தினகரன் ஆதரவாளர்கள் வைத்திருக்கும் பேனர் கலாய்த்துள்ளார்களா இல்ல புகழ்ந்து தான் வைத்துள்ளார்களா என தினகரனே கன்பியூஸ் ஆகும் அளவிற்கு வைத்துள்ளார்கள். திருச்சியில் டிடிவி ஆதரவாளர்கள்  வைத்துள்ள பேனரில் பிரஸ்மீட் நாயகன் என வர்ணித்துள்ளனர். எந்த பிரஸ்மீட்டாக இருந்தாலும் தைரியமாக தனது கருத்துகளை தினகரன் முன்வைக்கிறார் என்ற பெயர் உள்ளது.   தனது பண்ணை வீட்டில் ரெய்டு நடந்த போது கூட  பிரஸ்மீட் கொடுத்து அதகளப்படுத்தியதால், திருச்சி நகரில் பெருமையாக பேனர் வைத்துள்ளனர்.