முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுகவில் மீண்டும் நுழைந்த தினகரன், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு ஓரங்கட்டப்பட்டார். இதனால் அதிமுகவில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட்ட அமமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அந்த கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி வருகின்றனர்.

புதுச்சேரி மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் இருப்பவர் வேல்முருகன். இவருக்கு அங்கிருக்கும் நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை தினகரன் வெளியிட்டிருந்தார். அதில் மீண்டும் வேல்முருகனே புதுச்சேரி மாநில செயலாளராக நியமித்து அறிவித்தார்.

இதனால் புதுச்சேரி மாநில அமமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. வேல்முருகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அமமுக நிர்வாகியும் மக்களவை தேர்தல் வேட்பாளருமாகிய தமிழ்மாறன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து மாநில துணைத் தலைவர் பாண்டுரங்கன், அம்மா பேரவை செயலாளர் மூர்த்தி, இணைச்செயலாளர் உமா மோகன், துணைச் செயலாளர்கள் செந்தில் முருகன், அன்பு உள்ளிட்டவர்களுடன் சேர்த்து 20 க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து கொசக்கடை வீதியில் அவர்கள் அனைவரும் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு தங்கள் ராஜினாமா கடிதங்களை அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு அனுப்பி வைத்தனர்.

மாநில நிர்வாகிகள் பலர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளதால் புதுச்சேரி அமமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.