தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித்தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் மாறி மாறி முன்னிலையில் இருக்கின்றன.

515 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக 91 இடங்களிலும் அதிமுக 97 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. 5067 பதவிகளுக்கான ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 198 இடங்களிலும் திமுக 204 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும் 10 ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மதிமுக 1 மாவட்ட கவுன்சிலர் இடத்திலும், 3 ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 மாவட்ட கவுன்சிலர் இடத்திலும் 4 ஒன்றிய கவுன்சிலர் இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரு பதவிகளுக்கும் தலா ஒரு இடத்தில் வெற்றி வாய்ப்பில் இருக்கிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பாமக 6 , தேமுதிக 1 , பாஜக 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாமக 7 , தேமுதிக 8 , பாஜக 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

உள்ளாட்சித்தேர்தலில் தினகரனின் அமமுக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிட்டன. அமமுக 17 ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் 2 மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும் வெற்றி வாய்ப்பில் இருக்கிறது. நாம் தமிழர் கட்சி இதுவரை எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை.