கருணாசின் நடவடிக்கை அண்மைக்காலமாக வேறு மாதிரியாக இருப்பதால் அவரை டி.டி.வி தினகரன் கிட்டத்தட்ட கை கழுவிவிட்டதாக அ.ம.மு.க மூத்த நிர்வாகிகள் கிசுகிசுத்து வருகின்றனர். 

நகைச்சுவை நடிகராக சுற்றி வந்த கருணாசுக்கு எம்.எல்.ஏ சீட் வாங்கி கொடுத்து அவரை எம்.எல்.ஏ ஆக்கியவர் சசிகலா. மேலும் சட்டப்பேரவையிலும் கூட டி.டி.வி தினகரன் ஆதரவாளராகவே கருணாஸ் செயல்பட்டு வருகிறார். பேரவையில் டி.டி.வி தினகரனை அமைச்சர்கள் ஒருமையில் பேசிய போது எழுந்து அமைச்சர்களை ஒருமையில் பேசும் அளவிற்கு தினகரன் விசுவாசியாக இருந்தவர் கருணாஸ்.

இதே போல் தினகரனும் கூட கருணாசை நம்பத்தகுந்த வட்டாரத்திற்குள் வைத்திருந்தார். ஆனால் கடந்த வாரம் சசிகலாவை கருணாஸ் சந்தித்து சென்றது தினகரன் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை சிறையில் தன்னை யார் யாரெல்லாம் சந்திக்க வேண்டும் என்று சசிகலா தான் டிக் செய்வார். 

அதன்படியே தினகரன் ஏற்பாடுகளை செய்வார். அந்த வகையில் கடந்த 19ந் தேதி சசிகலா டிக் செய்திருந்த பெயர்களில் கருணாஸ் பெயரும் இருந்துள்ளது.

இதனை பார்த்ததும் முதலில் சசிகலா தான் கருணாசை சந்திக்க விரும்புகிறார் போல என தினகரன் நினைத்துள்ளார். ஆனால் உள்ளே சென்ற பிறகு தான் கருணாஸ், சசிகலாவை சந்திக்க வேண்டும் என்று வேறு ஒரு முக்கிய புள்ளி மூலம் பரப்பன அக்ரஹார சிறைக்கு தகவல் அனுப்பியது தினகரனுக்கு தெரியவந்துள்ளது. 

இதனால்  அதிர்ச்சி அடைந்தாலும் கூட அதனை வெளியே காட்டிக் கொள்ளவில்லை தினகரன். இந்த நிலையில் நாடார்கள், வன்னியர்கள், கவுண்டர்களை சகட்டு மேனிக்கு பேசி கருணாஸ் வம்பில் சிக்கிக் கொண்டார். கருணாஸ் கைது செய்யப்பட்ட உடன் அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் எப்போதுமே இருக்கும் பூச்சி முருகன் நேராக நுங்கம்பாக்கம் காவல் நிலையம் சென்று என்ன உதவி வேண்டும் என்று தளபதி கேட்கிறார் என்று தெரிவித்தார். 

அதற்கு மிக்க மகிழ்ச்சி வேண்டும் என்றால் கேட்கிறேன் என்று கருணாஸ் பதில் அளித்துள்ளார். 

அடுத்ததாக தி.மு.கவின் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் வழக்கறிஞர்களோடு கருணாசை காவல்நிலையத்திற்கு சென்று சந்தித்து வந்தார். தொடர்ந்து ஸ்டாலினே கருணாசுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். ஆனால் தினகரன் தரப்பில் இருந்து கருணாசுக்கு ஆதரவாக ஒரு துரும்பை கூட கிள்ளிபோடவில்லை. 

மேலும் கருணாஸ் மேடையில் பேசும் போது கவனமாக பேச வேண்டும் என்று அறிவுரை தான் தினகரன் கூறினார்.

கருணாஸ் கைதை கண்டித்து போராட்டம் நடத்த அவரது ஆதரவாளர்கள் ஆட்களை தேடிக் கொண்டிருந்தனர். அவர்களையும் கூட தினகரன் தரப்பு கண்டுகொள்ளவில்லை. ஏன் திடீரென கருணாசை தினகரன் கைவிட்டுவிட்டார் என்று விசாரித்த போது தான், அவர் தினகரனையே ஓவர் டேக் செய்து சசிகலாவை பார்த்தது மற்றும் தனது சமுதாயத்தின் மத்தியில் ஹீரோ ஆகும் வகையில் மற்ற ஜாதியை கடுமையாக பேசியது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்தே கருணாசை தினகரன் கை கழுவிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் பெங்களூர் சிறையிலும் கூட சிறிது நேரம் சசிகலாவிடம் கருணாஸ் ரகசியமாக பேசியதாக சொல்லப்படுகிறது. இருவரும் என்ன பேசினார்கள் என்கிற தகவல் வெளியாகவில்லை. ஆனால் சந்திப்பு நடைபெற்ற மூன்று நாட்களுக்கு பிறகு தான் கருணாஸ் மேடையில் சகட்டு மேனிக்கு பேசியுள்ளார்.