நான் அதிமுக பக்கம் சென்று விடுவதாக கடந்த சில நாட்களாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதை முற்றிலும் நான் மறுக்கிறேன் என அமமுகவின் துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி கூறியுள்ளார். 

அமமுகவின் துணை பொதுச்செயலாளராக இருப்பவர் ரெங்கசாமி. இவர் அதிமுகவில் தஞ்சை மாவட்ட செயலாளராக இருந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், அதிமுக ஆட்சி பிடித்தது. பின்னர், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நடந்த இடைத்தேர்தலில் ரெங்கசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் முன் கூட்டியே வெற்றி பெற்றிருந்தால்  அமைச்சராகியிருப்பார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பல்வேறு குழப்பங்களால் அமைச்சராகவில்லை. பின்னர், டிடிவி.தினகரன் அணிக்கு சென்றதால் பதவியை இழந்தார். தற்போது டிடிவி.தினகரன் அணியில் கடும் அதிருப்தியில் உள்ளதால் அதிமுகவில் இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தீவிர விசுவாசியாக நியாயத்திற்காகவும், உண்மைக்காகவும், போராளியாக தியாகத்தலைவி சின்னம்மா, மக்கள் செல்வர் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அவர்களின் பின்னால் உணர்வோடு பணியாற்றி வரும் என்னை அதிமுக பக்கம் சேர்ந்து விடுவார் என உண்மைக்கு புறம்பாக. ஒரு துளிகூட உண்மையின்றி தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இப்பொய்செய்தியை மறுப்பதோடு செய்தியினை வெளியிட்ட தினகரன் நாளிதழ் நிர்வாகத்தினருக்கு எனது கடுமையான கண்டனத்தினை தெரிவித்து கொள்கிறேன் என அமமுக துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி கூறியுள்ளார்.