சசிகலா தீவிர ஆதரவாளரான புகழேந்தி ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரு கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காங்கிரஸ், பாஜக, உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். 

அதேபோல் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்திருந்தார். இந்த பட்டியலில் ஒசூர் இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி எம்பி வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர். தற்போது 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஓசூர் தொகுதியில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில், அமமுகவின் கிருஷ்ணகிரி மக்களவை பொறுப்பாளரும், கார்நாடக மாநில கழக செயலாருமான புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் புதுச்சேரி மக்களவை தொகுதியில் அமமுக சார்பில் என். தமிழ்மாறன் போட்டியிடுகிறார். 

திருநெல்வேலி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் ஞான அருள்மணி அதிடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.