வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை  தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிகளை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன.

தேர்தல் பிரச்சாரம், கூட்டணி உள்ளிட்டவைகள் குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணியில் மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக- பாஜ இடையே கூட்டணி குறித்து திரைமறைவு போச்ச வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியில் தேமுதிக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறலாம் என தெரிகிறது.

மற்றொரு முக்கிய கட்சியான அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன், தங்களது கட்சி தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது என தெரிவித்திருந்தார். ஒரு சில மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை  நடைபெற்று வருவதாக கூறினார்.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன்,  “நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க ஐந்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்தார்.

பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற . தேசியக் கட்சிகள் தமிழகத்தின் நலன்களில் அக்கறை காட்டவில்லை.அதனால்  மாநிலக் கட்சிகள்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.

பாஜக மற்றும் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டுமென்று மக்கள் விரும்புவதாக தெரிவித்த தினகரன் , நீட் தேர்வு கிராமப்புற மாணவ-மாணவிகளின் மருத்துவக் கனவுக்கு குதிரைக் கொம்பாக இருக்கிறது. அதனால் தமிழக மாணவ-மாணவிகளை பாதிக்கக் கூடிய நீட் தேர்வு வேண்டாமென்று ஜெயலலிதா கூறினார். ஆனால், இப்போதிருக்கிற அரசு மத்தியில் ஆள்பவர்களின் கட்டளையை நிறைவேற்றுபவர்களாக இருக்கிறது. மத்திய அரசின் கிளை அலுவலகம் போல மாநில அரசு செயல்படுகிறது என குற்றம்சாட்டினர்..

மத்தியில் கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே ஒன்றுமே செய்யாதவர்கள், தற்போது  இடைக்கால பட்ஜெட்டை அறிவித்திருக்கிறார்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்துவதாகவும் கூறி மக்களை ஏமாற்றித்தான் பாஜக வாக்கு வாங்கியது.

அதனால் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில்  டெபாசிட் இழக்கச் செய்வதன் மூலம் மத்திய அரசுக்கும், அவர்களின் ஏஜெண்டாக இருக்கும் மாநில அரசுக்கும் முடிவுகட்ட வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.