எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழகத்தில் திமுக அதிமுக  என இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக,  பாமக,  என்.ஆர்,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன, தேமுதிக மற்றும் தமாகா கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்திய  யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது, மதிமுக, விசிக, இடது சாரிகள் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி  ஆகிய கட்சிகளுடன்  ஏற்கனவே தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது. 

இந்நிலையில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 38 தொகுதிகளிலும் தனியாக நிற்பதாக அறிவித்து, தனது கூட்டணிக் கட்சியாக எஸ்டிபிஐ கட்சியை அறிவித்திருக்கிறார். 

டி.டி.வி.தினகரன் அமமுகவுக்காக முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவரும், தினகரனின் தீவிர ஆதரவாளருமான வெற்றிவேல். இந்திய தவ்ஹித் ஜமாத்துடன் பேச்சு நடத்தி அவர்களின் ஆதரவை அமமுகவுக்குப் பெற்றுள்ளார். இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியோடும் வெற்றிவேல் தொடர்ந்து பேசிவந்தார்.

இதன் அடுத்த கட்டமாக, சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  தினகரனை, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவரும், தமிழக முன்னாள் தலைவருமான தெகலான் பாகவி தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர். இதையடுத்து அமமுகவுடன் இணைந்து எஸ்டிபிஐ கூட்டணி அமைத்துள்ளது. இந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.எஸ்டிபிஐ  கட்சி ‘ஆர்.கே.நகர் முதல் இடைத் தேர்தலின்போதே டி.டி.வி.தினகரனுக்குஆதரவு அளித்திருந்தனர். 

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் தனியாக நின்ற  எஸ்டிபிஐ. முதல் தேர்தலிலேயே நெல்லை தொகுதியில் 14 ஆயிரத்து 877 வாக்குகளும், வடசென்னையில் 14 ஆயிரத்து 585 வாக்குகளும், ராமநாதபுரம் தொகுதியில் 12 ஆயிரத்து 541 வாக்குகளும் பெற்று அரசியல் கட்சிகளைக் கவனிக்க வைத்தது குறிப்டத்தக்கது.