Amman Temple fire refusing Political organizations with Meenakshi

மதுரை மீனாட்சியின் ஆத்திரத்தை உக்கிரமாக கிளப்பி மிகப்பெரிய பேரிடரை நிகழ்த்தாமல் அடங்கமாட்டார்கள் போலிருக்கிறது! என்று சொல்ல தோண்றும் வகையில் மீனாட்சி கோயில் விவகாரத்தின் அனல் அடங்காமல் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர் சிலர்.

வெறும் தீ எரிந்த சம்பவமாக இருந்த இந்த விவகாரத்தை ஊதி ஊதி ‘ஆரிய திராவிட மோதல்’ விவகாரமாக மாற்றி அரசியல் செய்ய துவங்கியுள்ளது ஒரு கும்பல்.
பிரச்னை இப்படித்தான் போய்கிறது...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து நிகழ்ந்த பிறகு அறநிலையத்துறையை மிக கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ள இந்து அமைப்புகள் ‘திராவிட அறநிலையத்துறையே ஆலயங்களை விட்டு வெளியேறு. கோயில் நிர்வாகத்தை விட்டு விலகு.’ என்று குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.

இந்த குரலுக்கு மிக வலிமையான எதிர்குரலை கொடுக்க துவங்கியுள்ளனர் எதிரமைப்புகள். குறிப்பாக விருது பெற்ற எழுத்தாளரும், வரலாற்று பதிவுகளை துல்லியமாய் அறிந்தவருமான சு.வெங்கடேசன் “பொதுவாக பார்த்தால் இந்து அமைப்புகளின் அந்த கோரிக்கையானது சரியானதாக தெரியும்.

ஆனால் ‘திராவிட அறநிலையத்துறை’ என்று அவர்கள் குறிப்பிடுவதன் மூலம் அவர்களின் உள் மன குரூரம் தெளிவாக புலப்படுகிறது. அறநிலையத்துறை சிறப்பாக ஆலயங்களை பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்களேயானால் இவர்களை நாம் வரவேற்கலாம். ஆனால் அதைவிட்டு எப்போது இப்படியொரு சம்பவம் நிகழும்? என்று காத்திருந்தவர்கள் போல பேசுவது சகிக்கவில்லை.

மதுரை ஆதீனத்தின் கையில் மீனாட்சியம்மன் கோயில் இருந்தபோது எண்ணற்ற முறைகேடுகள் நிகழ்ந்தன. ஆனால் பிரிட்டீஸ் ஆட்சியில் அந்த அதிகாரம் மாற்றப்பட்டது. இந்த நடவடிக்கையை பாரட்டும் விதமாக மக்கள் ஒரு விளக்குத்தூணை அமைத்து அதற்கான எண்ணெய்யை மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து பல வருடங்களாக கொடுத்திருக்கிறார்கள்.

கோயிலின் நிர்வாக குறைபாடுகள்தான் விபத்துக்கு காரணம் என்று சொல்பவர்கள் ஒரு விஷயத்தை உற்றுப் பார்க்க வேண்டும். கழிந்த பத்து ஆண்டுகளில் இந்த கோயிலின் நிர்வாக செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளன. கடந்த ஆண்டு தூய்மைக்கான தேசிய விருது பெற்ற ஆலயம் இது.

இக்கோயில் நிர்வாகம் ஆலயத்தினுள் எடுத்துள்ள பராமரிப்பு நடவடிக்கைகள் முன்மாதிரியான செயல்பாடுகளாக அறநிலையத்துறை பாராட்டி, மற்ற ஆலயங்களிலும் அப்படி செய்திட பரிந்துரைத்துள்ளது. சூழ்நிலை இப்படியிருக்கையில் கோயில் நிர்வாகத்தை வெளியேற சொல்லி வலியுறுத்துவதில் உள்நோக்கம் தெரிகிறது.” என்கிறார்.

ஆனால் இந்த கூற்றுக்களையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட தரப்பினர் மிக கடுமையாய் எதிர்க்கின்றனர். “ஆலயத்தினுள் கடைகள் அமைத்திட இடம் கொடுத்ததில் துவங்கி அறநிலைய துறையின் பல செயல்பாடுகள் மோசமாக உள்ளன. அதன் விளைவே இப்படியொரு விபத்தின் உட்காரணம்.

திராவிட அறநிலையத்துறை! என்று நாங்கள் சொன்னதில் தவறென்ன இருக்கிறது? ஆலயங்களை நிர்வகிக்கிறோம் எனும் தூய உணர்வே இல்லாமல் ஏதோ காயலான் கடை கணக்கு வழக்கு பார்ப்பது போல் செயல்படும் இவர்களால்தான் கோயில்களின் பரிசுத்தம் கெட்டுப்போய் பல பிரச்னைகள் உருவாகிறது. ஆண்டவனின் கோபமும் வெடித்து இப்படியான தீ பிடிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன.

எனவேதான் சொல்கிறோம் திராவிட அறநிலையத்துறை வெளியேற வேண்டுமென்று.

வெங்கடேசனுக்கு ஆலய பரிசுத்தம் பற்றி என்ன தெரியும்? சினிமாவுக்கு கதை எழுதிக்கொடுத்து சம்பாதிக்கவும், விருதுக்காக புனைவுகளையும், கற்பனைகளையும்

எழுதி காசு பண்ணுபவருக்கு மீனாட்சியின் பெருமை தெரியுமா? அவரது பேச்சையெல்லாம் ஒரு விஷயமாகவே நாங்கள் எடுப்பதில்லை.” என்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் இந்த தீ அடங்காது போலிருக்கிறது.